கடன் தீர என்ன வழி?

ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகம் கணிக்கும்போது ‘ஜெனனி ஜென்ம, சௌக்யானாம்’ என்ற செய்யுளை எழுதுவார்கள். இதில் ‘பதவி பூர்வ புண்ணியானாம்’ என்ற சொற்றொடர் வரும். இதன் பொருள் என்னவென்றால் இந்த ஜாதகத்தில் கிரக சேர்க்கைகள், பார்வைகள், சுபபலம், அசுபபலம் என்று எது இருந்தாலும் அதற்கும் மேலே கர்மபலன் என்று ஒன்று உண்டு. அதாவது அவரவர் பிராப்தப்படி எதற்காக இந்த பிறவி எடுத்து இருக்கிறோமோ, அதற்கேற்ப அவரவர் பூர்வபுண்ணியத்தை பொறுத்தே எல்லாம் அமையும் என்பதாகும். ஆகையால்தான் ஜோதிடம் பார்க்கும்போது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை முக்கியமாக பார்ப்பார்கள்.

ருண, ரோக, சத்ரு ஸ்தானம்…

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒவ்வொரு ஸ்தானத்தை குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்கள். ஜாதகத்தில் லக்னம் என்பது மிக முக்கியமானதாகும். இந்த இடத்தில் இருந்துதான் மற்ற வீடுகளை கணக்கிடுகிறோம். லக்னம் ஒன்றாம் இடம். இதற்கு அடுத்த வீடு, தனஸ்தானம் எனும் இரண்டாம் இடம். இந்த வரிசையில் ஆறாம் இடம் என்பது ருண, ரோக, சத்ரு ஸ்தானம். ருணம் என்றால் கடன். ரோகம் என்றால் வியாதி. சத்ரு என்றால் எதிரி. இந்த ஆறாம் இடமும், ஆறாம் அதிபதியும், அவருடன் சேர்ந்த கிரகங்களும், பார்க்கும் கிரகங்களும், ஒருவருக்கு கடன் தொல்லைகளை ஏற்படுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

கடன் எப்படி, ஏன்?

கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கடன்பட்டவர்களின் மன வேதனையைப் பற்றி முன்பெல்லாம் சொல்வார்கள். ஆனால் தற்காலத்தில் எங்கும் கடன், எதற்கும் கடன் என்ற சூழ்நிலை நிலவுகிறது. ஒரு குறிப்பிட்ட சதவிதிதத்தினருடன், சில மகா பாக்யவான்களை தவிர மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் கடன் சுமை ஏற்பட்டு விடுகிறது. இதில் சுப விரயமும் அசுப விரயமும் அடக்கம். ஒரு சிலர் வருமானத்திற்கு ஏற்ற வகையில் விரலுக்கு ஏற்ற வீக்கம் என்ற அடிப்படையில் வாழ்க்கை நடத்துவார்கள். சிலர் வருவது வரட்டும் என்று நினைப்பார்கள். சுப விரயம் என்ற வகையில் முதலில் மகன், மகள் திருமணம், வளைகாப்பு, பிரசவம், கல்வி செலவு, வீடு கட்ட நிலம் வாங்க, தொழில் தொடங்க, ஆடம்பர வாழ்க்கை என்ற வகையில் கடன் ஏற்படுகிறது.

அசுப விரயம் என்ற வகையில் மருத்துவ செலவுகள், வழக்குகள், வீண் டாம்பீகம், தொழில் முடக்கம், விபத்துகள் என பல விஷயங்கள் நம்மை கடனாளி ஆக்குகிறது. ஜாதக பலம் உள்ளவர்கள் ஏதாவது ஒரு வகையில் கடனில் இருந்து மீண்டு வந்து விடுகிறார்கள். பலருக்கு கடைசிவரை ஏதாவது உருட்டல்-மிரட்டல் இருந்து கொண்டே இருக்கும். சிலர் அகலக்கால் வைத்து கடன் தொல்லையில் தவறான முடிவுகளுக்கு சென்று விடுகிறார்கள். வீடு, வாசல், சொத்துகளை இழந்து தெருவுக்கு வரும் அளவுக்கு கிரகங்கள் ஆட்டிப் படைக்கின்றன.

கிரகங்களால் உண்டாகும் கடன் சுமைகள்

பொதுவாக ஜாதக கட்டத்தில் கிரக சேர்க்கைகள் காரணமாகவே கடன் சுமை உண்டாகிறது. இரண்டாம் இடம், ஐந்தாம் இடம், ஒன்பதாம் இடம், பதினொராம் இடம் ஆகியவை பலம் பெற்று இருந்தால் கடன் சுமை வராது. வந்தாலும் பாதிக்காது. ஏதாவது ஒரு வகையில் பணம் வந்து, கடன் அடையும். தனஸ்தானமான இரண்டாம் இடத்தில் நீச்ச கிரகம் இருந்தாலும் 6, 8, 12ம் இட கிரகங்கள் இருந்தாலும் கடன் ஏற்படும். குரு நீச்சம் அடைந்து அல்லது 6, 8, 12 ல் மறைந்தால் பொருளாதாரம் பாதிக்கப்படும். சனி, செவ்வாய் சேர்க்கை அல்லது சனி, கேது சேர்க்கை உள்ள ஜாதகங்கள் கடனால் அவதிப்பட நேரிடும். பெரும்பாலும் சுமுகமாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் திடீர் வீழ்ச்சி, பண நஷ்டம், சொத்து இழப்பு ஏற்படுவதற்கு அந்தந்த கால கட்டங்களில் வரும் தசாபுக்திகளே காரணம்.

6, 8, 12ம் இட சம்பந்தப்பட்ட தசாபுத்திகளில் கடன் தொல்லைகள் கூடும். ஆறாம் அதிபதி லக்னாதிபதி, லக்னத்துடன் சம்பந்தப்படும்போது வீண் விரயங்கள், உடல் கோளாறுகள் மற்றும் தவறான அணுகுமுறையாலும் கடன் உண்டாகும். இரண்டாம் அதிபதியுடன் சம்பந்தப்படும்போது சுப செலவு, குடும்ப செலவு, கண் சம்பந்தமான மருத்துவ செலவுகள் ஏற்படும். மூன்றாம் அதிபதியுடன் சம்பந்தப்படும்போது சொந்தபந்தம், சகோதரர்களால் வீண் செலவு, கடன் வரும். நான்காம் அதிபதியுடன் சம்பந்தப்படும்போது நிலம், வீடு, விவசாயம், தாயாரால், கல்வியினால் கடன்பட நேரிடும். ஐந்தாம் அதிபதியுடன் சம்பந்தப்படும்போது சுப செலவுகளுக்காக கடன் ஏற்படலாம்.

ஏழாம் அதிபதியுடன் சம்பந்தப்படும்போது வழக்குகள், விபத்துகள், நண்பர்கள் மற்றும் மனைவியினால் கடன் ஏற்படும். எட்டாம் அதிபதியுடன் சம்பந்தப்பட்டால் எதிர்பாராத செலவுகள் கடன்பட வைக்கும். ஒன்பதாம் அதிபதியுடன் சம்பந்தப்பட்டால் பூர்வீக சொத்துகளை விற்க நேரிடும். பத்தாம்  அதிபதியுடன் சம்பந்தப்பட்டால் தொழில், வியாபாரம் காரணமாக கடன் சுமை கூடும்.

கடன் தீர யோசனை – பரிகாரம்

கடன் தீர சாஸ்திரத்தில் பல பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன. அஸ்வினி, அல்லது அனுஷம் நட்சத்திர நாளில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சுமை படிப்படியாக குறையும். செவ்வாய்க்கிழமையன்று, செவ்வாய் ஓரையில் கடனை திருப்பித் தருவதால் கடன் பிரச்னை நீங்கும். ஞாயிற்றுக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியன்றும் சனிக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியிலும் குளிகன் நேரத்தில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சீக்கிரம் அடைபடும். மைத்ர முகூர்த்தம் என்று ஒன்று உள்ளது, இது ஒரு தமிழ் மாதத்தில் அதிகபட்சம் மூன்று நாட்களுக்கு வரும்.

அதாவது அஸ்வினி நட்சத்திர நாளில் மேஷ லக்னம் நடைபெறும்போதும், அனுஷ நட்சத்திர நாளில் விருச்சிக லக்னம் நடைபெறும்போது யாரிடம் அதிக கடன்பட்டிருக்கிறோமோ அவரிடம் அசலில் ஒரு சிறிய பகுதியை கொடுத்தால் அந்த முகூர்த்த விசேஷம் காரணமாக, உங்கள் கடன் விரைவாக குறையும்; அடைபடும். தினசரி பக்தியுடனும் நம்பிக்கையுடனும் கந்த சஷ்டி கவசம் படித்துவர ருண, ரோக, சத்ரு தொல்லை நீங்கும். சஷ்டி திதியன்று முருகன் கோயில்களில் சஷ்டி கவசம் படிக்க, கடன் நிவாரணம் ஏற்படும்.

ஓம் ஸ்ரீம் கம் ஸௌம்யாய கணபதியே வர வரத சர்வ
ஜனம்மே வசமானய் ஸ்வாஹா
ஹிருயாதி ந்யாஸ நிக்விமோக

– என்ற இந்த மந்திரத்தை தினசரி 108 முறை நம்பிக்கையுடன் மனத்துள் ஜெபித்து வந்தால் ருண
தோஷம் நீங்கும்.

 

கடன் தோஷம் நீங்க

லக்கனத்துக்கு 1 முதல் 12 வரை உள்ள கிரகங்கள் 6-வது வீட்டில் அமர்வதால் கடன் தொல்லை ஏற்படுகிறது. எளிய பரிகாரங்களைச் செய்வதன் மூலம் கடன் தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
பரிகாரம் – 1 : சென்ற பிறவியில் செய்த தவறுகளால் இந்தப் பிறவியில் ஏற்பட்ட கடன் தொல்லையிலிருந்து மீள, 3 பவுர்ணமி நாட்களில் அவரவர் குலதெய்வங்களை வழிபட்டு வந்தால் கடன் தொல்லை படிப்படியாகக் குறையும். கடனை அடைத்துவிடலாம்.
பரிகாரம் – 2 : குலதெய்வம் அருகில் இல்லாமல் வெகு தூரத்தில் வசிப்பவர்கள், அவர்கள் வீட்டிலேயே குலதெய்வ படத்தை வைத்து அல்லது குலதெய்வம் உள்ள ஊர் திசையை நோக்கி 5 முக நெய்விளக்கு ஏற்றி, 9 பவுர்ணமி நாட்கள் தொடர்ச்சியாக வழிபட்டு வந்தால் கடன் சுமை குறையும். 90 நாட்களுக்குள் கடனை அடைத்துவிடலாம். உங்களுக்கு வரவேண்டிய பாக்கி இருந்தாலும் வசூலாகிவிடும்.
பரிகாரம் – 3 : 9 பவுர்ணமி நாட்கள் குலதெய்வப் பூஜை செய்து வந்தால், கடன் சுமை படிப்படியாகக் குறைந்து, 90 நாட்களில் பெருமளவு கடனைக் கட்டி நிம்மதி பெறலாம். வரவேண்டிய பாக்கிகளும் வசூலாகிவிடும்.
கடன் தொல்லை தீர்க்கும் பைரவர் விரதம்
அஷ்டமி தினங்களில் பைரவருக்கு புனுகு சாத்தி நல்லெண்ணெய் தீபமேற்றி, அபிஷேக ஆராதனைகள் செய்து கடன் தொல்லைகள் தீர வேண்டுமென மனமுருகிப் பிரார்த்தனை செய்து வரலாம். பைரவர் வழிபாட்டை மேற்கொள்ளும்போது யாரிடமும் எதுவும் பேசக்கூடாது.
அர்ச்சகரிடம் மட்டும் தேவையான விபரங்களைத் தெரிவித்து மவுனம் அனுசரிக்க வேண்டும். கடன் சுமைகள் தீரும் வரையில் கண்டிப்பாக அசைவ உணவு தவிர்க்கப்பட வேண்டும். சன்னிதி முன் அமர்ந்து ‘ஓம் ஸ்ரீ பைர வாய நமஹ’ என்ற மந்திரத்தை 24 நிமிடங்களான ஒரு நாழிகைப் பொழுது மனதால் ஜபம் செய்வது அவசியம்.
அல்லது, நமக்கு மட்டும் கேட்கும்படியாக மெல்லச் சொல்லிக்கொள்ளலாம். ஸ்ரீ பைரவர் என்ற சிவாம்ஸம் நமது பக்தி கலந்த வேண்டுகோளை ஏற்றருள் புரிய வேண்டுமானால், மவுனமும் அமைதியும் கொண்டு மானசீக ஜபம் செய்வது முக்கியமாகும். தனிப்பட்ட நமது வாழ்வில் நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதும் அவசியம்.
அப்படி நெறிமுறை சார்ந்த வாழ்வால் நாம் நிச்சயமாக உயர் நிலையை அடைவது இறை நியதியாகும். திருக்கோவில்களில் கோ-பூஜை நடக்கும் போது, அதில் பங்கேற்று கோ-பூஜை செய்தாலும் நமது கடன் தொல்லைகளுக்கு விமோசனம் உண்டாகும்.
காமதேனுவின் பிரத்யட்ச தோற்றங்களான பசுக்களுக்கு, நாம் வழங்கும் எந்தவித உணவானாலும் நமக்கு அது நல்ல விளைவுகளைத் தரும் கிரக சாந்தியாக அமையும். தற்போதைய காலச் சூழ்நிலைகளில், ஒருவருடைய அறிவுத் திறம், கல்வித்தரம், சுதந்திர மனோபாவம் ஆகிய வாழ்வு முறைகளின் வெளிப்பாடாக, அகவியல் பயன்பாட்டு வழிமுறைகளான ஆன்மிக உணர்வுகள் குறைத்து மதிப்பிடப்படுகிறது.அதனால் நாம் இழந்த பண்பாட்டின் வழித்தடங்கள் ஏராளம். நமது இந்தியப் பாரம்பரியத்திற்கு என்று ஒரு மிக வலிமையான பின் புலம் உண்டு. அது அகவியலாம் ஆன்மிகமாகும். சிறிதோ, பெரிதோ நாம் செய்யும் பூஜைகளோ, தெய்வ தரிசனங்களோ, ஜப தபங்களோ நிச்சயமாக நமது ஆழ்மனதில் நல்ல பதிவாக அமைந்து நல்ல விளைவு களை உண்டாக்கும்.

விஞ்ஞான வளர்ச்சிகள் தர முடியாத மன அமைதி யைப் பெறுவதற்காகவே நமது மதம் சார்ந்த வழிபாட்டுத் தலங்கள் நம் முன் னோர்களால் திட்டமிட்டு அமைக்கப்பட் டுள்ளன. கலையழகும், தெய்வீகமும் நிரம்பிய அத்தகு திருத்தலங்களை நாம் அடிக்கடி தரிசித்து வந்தாலே ஒரு இனம் தெரியாத அமைதியை உறுதியாக உண ரலாம். திருத்தலங்களைத் தரிசிப்போம்.. மேன்மை பெறுவோம்.

கைமாற்றாகக் கொடுத்த தொகை திரும்பி வர பரிகாரம்

இக்காலத்தில் எத்தனையோ பேர் கொடுத்த பாக்கிகள் திரும்பி வராமல் தினமும் கவலைப்படுகிறார்கள். ஜாதகங்களைக் கொண்டு இதற்கு என்ன வழிவகை செய்யலாம்? என்றும் யோசனைகள் கேட்டு வருகின்றனர்.

எளிய முறையில் செய்யும் தெய்வ வழிபாட்டின் மூலமே இந்தச் சிக்கலில் இருந்து விரைவில் விடுபட இயலும். செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை நேரத்தில் கோவிலுக்குச் சென்று வைரவர் சன்னிதியில் அகல் விளக்கில் பசு நெய் ஊற்றி, தங்கள் கோரிக்கைகளைக் கூறி வாருங்கள்.

இவ்வாறு தொடர்ந்து செவ்வாய்க் கிழமைகளில் வழிபட்டு வந்தால் நீங்கள் பிறரிடம் கொடுத்த பணம் நினைத்துப் பார்க்க இயலா வண்ணம் தானாகவே உங்கள் கைக்கு வந்து சேரும். வைரவரை வழிபட்டால் வளர்ச்சியினைக் கூட்டிடலாம்.