ஜாதகமும் உயர்கல்வி யோகமும்

கல்வி என்பது ஓர் அழியாச் செல்வம். கல்வியைப் பற்றி ஆன்றோர்கள், சான்றோர்கள், அறிஞர் பெருமக்கள் பலவகையாக சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.
‘ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவருக்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து’ என்று திருவள்ளுவர் கல்வியின் உயர்வைப் பற்றி குறிப்பிடுகிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த வரிகள் இப்போதும் பொருத்தமாக இருக்கின்றன. ‘கற்றோருக்கு சென்ற இடமெல்லாம்  சிறப்பு’ என்பார்கள். இன்றைய கால கட்டத்தில் சிறப்பு மட்டும் அல்லாமல், செழிப்பும் உண்டாக்குகிறது, கல்வி. நன்கு படித்தவர்கள் அரசாங்கம்,  வங்கி, முன்னணி மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் லட்சம், லட்சமாக சம்பாதிக்கிறார்கள்.

மதிப்பு, மரியாதை, அந்தஸ்து, செல்வச் செழிப்பு, வசதிகள் ஆகியவற்றை வாரிக் கொடுக்கக்கூடிய கல்வி யோகம் யாருக்கு எப்படி இருக்கும்? சிலருக்கு கல்வி ஆரம்பம் முதல் சரளமாக வரும். ஒரு சிலருக்கு பள்ளிப் படிப்பு முடித்தபின் நல்ல உயர்கல்வி யோகம் வரும். சிலருக்கு கல்வி  தடைபடும், தடைபட்ட கல்வி தொடரும். ஒரு சிலருக்கு படித்த படிப்பும் பார்க்கும் வேலையும் மாறுபடும். பலர் ஒன்றுக்கு மேற்பட்ட பட்டங்கள் பெறு வார்கள். இன்றைய சூழ்நிலையில் கல்வி என்பது ஆலமரம் போல வளர்ந்து பல கிளைகள், விழுதுகளை விட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ்டூக்கு  பிறகு என்ன படிக்கலாம் என்று சொல்ல ஏராளமான புத்தகங்கள், ஆலோசகர்கள், வழிகாட்டிகள் இருக்கின்றனர்.

உயர்கல்வி பயின்று பட்டம் பெற்று, அதிலும் ஆராய்ச்சி பட்டம், டாக்டர் பட்டம் பெற்று சம்பாதித்து வளமான வாழ்க்கை வாழ ஜோதிட ரீதியாக  நமக்கு என்ன அம்சம் உள்ளது? நம் ஜாதக அமைப்பின்படி என்ன படிக்கலாம்? நமக்கு என்ன தொழில், உத்யோகம் அமையும் என்பதை ஜோதிட  சாஸ்திரம் தெள்ளத் தெளிவாக கூறுகிறது. ஜோதிடத்தில் கல்வி நிலை ஜாதகம் என்று எடுத்துக் கொண்டால் எல்லா ஸ்தானங்களும் ராஜ கிரகங்களும் பலம் பெறுவது அவசியமாகும். நவகிரகங்களின் பலம் முக்கியம்.

இதில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு ஆதிக்க ஆற்றல் உள்ளது. அந்த வகையில் அறிவாற்றல், புக்தி, யுக்தி, பேச்சு ஞானம், கல்வி, வித்தை, யோசனை, சமயோசித அறிவு என இந்த இனங்களில் நம்மை இயக்குகின்ற கிரகம் ஒன்று உண்டென்றால் அது கல்விக்கு, வித்தைக்கு அடித்தளம்  அமைக்கின்ற, ‘வித்யாகாரகன்’ என்று அழைக்கப்படும் புதன்தான். இதற்கு அடுத்ததாக லக்னத்திற்கு நான்காம் இடமும் ஆரம்ப கல்வி வழங்கும்  ஸ்தானமாகும். அதற்கு அடுத்தபடியாக பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புக்கு உரிய இடமான பாக்யஸ்தானம், ஒன்பதாம் இடமாகும்.

கல்வியைப் பொறுத்தவரை, 2, 4, 5, 9 ஆகிய இடங்கள் முக்கியமானவை. இதைத் தவிர இன்னொருவரும் இருக்கிறார். அவர்தான் லக்னாதிபதி. இவர் தான் நம் ஜாதகத்தை இயக்குபவர். ஆக 1, 2, 4, 5, 9, 10 ஆகிய ஸ்தானங்களில், அந்தந்த ஸ்தான அதிபதிகள் பலமாக இருப்பது மிகவும் அவசிய மாகும். இந்த இடங்களில் இருந்துதான் நம் கல்வி அறிவு வெளிப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக நாம் உயர் கல்வியாக பட்டப்படிப்பு படிக்கும்போது  நடைபெறுகின்ற தசைகளும் புக்திகளும் முக்கிய பங்கு வகிக்கும்.

மருத்துவப் படிப்பும் கிரக அமைப்பும்

எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிபார்ம், டிபார்ம், எம்பார்ம், நர்ஸிங் மற்றும் அதன் உட்பிரிவுகள் மருத்துவ தொழில்கள். ஸ்கேன் சென்டர், பரிசோதனை கூடம்  ஆகியவற்றை அமைப்பதற்கு மருத்துவ கிரகம் என்று அழைக்கப்படும் கேதுபகவான் அருளவேண்டும். அத்துடன் சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய  கிரகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்க வேண்டும். 4, 9, 10ம் வீடுகளுக்கு குருவின் தொடர்பு இருந்தால் வயிறு சம்பந்தமான படிப்பு; புதன்  தொடர்பு நரம்பியல்; செவ்வாய் தொடர்பு, அறுவை சிகிச்சை; சனி தொடர்பு, எலும்பு, பல் படிப்பு; சுக்கிரன் தொடர்பு, கண் மருத்துவம், சுக்கிரன்+சந்தி ரன் தொடர்பு காது-மூக்கு-தொண்டை என அமையும். அஸ்வினி, மகம், மூலம், திருவாதிரை, சுவாதி, சதயம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம்,  மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் மருத்துவ யோகத்திற்கு வழிவகுக்கும்.

இன்ஜினியர் ஆக்கும் சனி

சனிக்கும் 4, 9ம் இடத்துக்கும் தொடர்பு ஏற்பட்டால், இன்ஜினியர் ஆகும் யோகம் உண்டு.

ஆடிட்டர் ஆகும் யோகம்

கணக்கு சம்பந்தமான படிப்புகள் அக்கவுண்டன்சி, பி.காம், எம்.காம், சி.ஏ. போன்றவற்றில் தேர்ச்சிபெற சூரியன், புதன், செவ்வாய் ஆகியோர் தயவு  தேவை. நிச்சயமாக புதன் மிகப் பெரிய பலம் பெற்றால்தான் கணக்கு படிப்பு வரும்.

சட்டம் – வக்கீல்

சட்டப் படிப்பிற்கு அஸ்திவாரம் லக்னமும் லக்னாதிபதியுமாகும். அத்துடன் வாக்கு ஸ்தானம் எனும் இரண்டாம் இடம் பலம் பெற வேண்டும். மேலும்  நீதித்துறை கிரகமான குருவின் அருள் அவசியம் தேவை.

கம்ப்யூட்டர் இன்ஜினியர்

கம்ப்யூட்டர் ஹார்ட்வேர், சாஃப்ட்வேர் நிபுணர் ஆவதற்கு லக்னாதிபதி மற்றும் புதனின் பலம் தேவை. மேலும் ராகுவின் ஒத்துழைப்பும் முக்கியமாகும்.

சினிமா துறையில் ஜொலிக்க

கேமராமேன், எடிட்டிங், சவுண்ட் இன்ஜினியர், டைரக்டர் ஆகிய துறைகளில் நுழைய புதன், சுக்கிரன், செவ்வாய், ராகு ஆகிய கிரகங்கள் பத்தாம்  இடத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும்.

உயர் கல்வியும் கிரக அமைப்புகளும்

வித்யாகாரகன் புதன், இரண்டாம் அதிபதி பலம் பெற்றால் இடையூறின்றி பட்டம் பெற முடியும்.

சந்திரனுக்கு கேந்திரத்தில் புதன்-குரு இருப்பது வித்யா கஜகேசரி யோகம். இந்த அமைப்பு பெரிய அந்தஸ்தை கொடுக்கும்.

மேஷ ராசியில் சூரியன்-புதன் சேர்க்கை பெற்றால் சாஸ்திரமேதை, தத்துவஞானி, மொழி ஆராய்ச்சியாளராகப் பரிமளிக்கலாம்.

பத்தாம் வீட்டுடன் புதன் தொடர்பு கொண்டால், எழுத்தாளர், கவிஞர், நிருபர், செய்தி ஆசிரியர் ஆகலாம்.

சூரியன் வீரிய ஸ்தானமான மூன்றாம் இடத்தில் இருந்தால் அறிவியல், இசை துறையில் நாட்டம் ஏற்படும். குரு பார்த்தால் சங்கீத ஞானம்
உண்டாகும்.

லக்னம், நான்கு, ஏழு, பத்து ஆகிய இடங்களில் சூரியன், சந்திரன் சேர்க்கை மற்றும் அமாவாசை, பௌர்ணமி ஆகிய திதிகளில் பிறந்திருந்தால்  சிறந்த எழுத்தாளர், பேராசிரியர், விரிவுரையாளர் ஆகலாம்.

அரியர்ஸ், ஃபெயில் – என்ன காரணம்?

கல்வி பயிலும் காலத்தில் தடைகள் வருவதற்கு கிரக தசாபுக்திகளும் கோச்சார நிலைகளுமே காரணம். நீச்ச கிரக தசைகள் 6, 8, 12ம் கிரக தசைகள்  காரணமாக தடைகள், தோல்வி ஏற்படும்.

புதன் நீச்சமாகி அல்லது பலம் குறைந்து தசை வந்தால் படிப்பில் நாட்டம் குறையும் மறதி உண்டாகும், குழப்பங்கள், மன சஞ்சலம் ஏற்படும். தேர்வின் போது, 6, 8, 12ம் அதிபதியுடன் நான்காம் அதிபதி சனி, செவ்வாய் சேர்க்கை காரணமாக எதிர்பாராத விபத்து மற்றும் ஆரோக்கிய குறைவு  காரணமாக தடைகள் வரும்.

படிக்கும்போது லக்னம், ஐந்து, ஏழு, எட்டாம் இடங்களில் சந்திரன், சுக்கிரன், செவ்வாய் சம்பந்தம் காரணமாக காதல் எண்ணங்கள், சபலபுத்தி  மனதை அலை பாய வைத்து தடையை ஏற்படுத்தும்.

படிக்கும்போது சுக்கிரன், லக்னாதிபதி, செவ்வாய் சேர்க்கை பெற்ற தசை வந்தால் கூடாத நட்பும், தேவையற்ற விஷயங்களில் நாட்டமும் உடல்நலக்  கோளாறுகளும் தடையை ஏற்படுத்தும்.

கோச்சார கிரக நிலைகளான ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, நான்கில் சனி, லக்னத்தில் ராகு-கேது போன்ற கிரக சுழற்சி மாற்றங்களால் மறதி, அசதி, சோம்பல், ஏமாற்றம் போன்றவை உண்டா கும். இதனால் கல்வி தடைபடும்.

அந்தந்த கிரக பலம், பார்வை பலம், சேர்க்கை பலம், புதன் பலம், தசாபுக்தி போன்றவற்றிற்கு உரிய பரிகாரங்கள் செய்வதன் மூலம் தோல்விகளை தவிர்க்கலாம்.