காதல், கலப்புத் திருமணங்கள் செய்து வைக்கும் கிரகங்கள் எவை ?

இன்றைய கால கட்டத்தில் காதல், கலப்புத் திருமணங்கள் என்பது சர்வ சாதாரணமாக போய்விட்டது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக ஆணும் பெண்ணும் சந்திப்பதும் பேசுவதும் ஒரே கல்லூரியில் சேர்ந்தே படிப்பதும் ஒரே இடத்தில் பணியாற்றுவதும் காரணங்கள்.

திருமண விநோதங்கள்

காதல் திருமணங்கள் என்பது மிகவும் விநோதமானது. கண்டதும் காதல், அல்லது பல வருட காதல், மாணவ பருவத்திலேயே காதல், பணிபுரியும் இடங்களில் காதல், முதலாளி, தொழிலாளி இடையே காதல் என்று பல வகைகள் உள்ளன. அந்தஸ்தில் மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தில் இருக்கும் இருவர், காதல் மூலம் இணைகிறார்கள். தாய் தந்தையர் தம் மகன், மகள் பற்றி பல மனக்கோட்டை கட்டி வைத்திருப்பர். அப்படிச் செய்ய வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும், பெரிய படிப்பு, பெரிய உத்யோகம், பெரிய இடம் என்று ஏதேதோ கற்பனையில் இருப்பார்கள். ஆனால் திடீரென்று ஒருநாள் இவர்கள் காதல் திருமணம் செய்துகொண்டு வந்து பெற்றோரின்  மனக்கோட்டையைத் தகர்ப்பார்கள். இதுதான் கோள்களின் விளையாட்டு.

ஜாதகமும் – காதல் திருமணமும்

காதல் திருமணங்கள் பற்றிய கிரக சேர்க்கை, அம்சங்கள்,  பல ஜோதிட நூல்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இருந்தாலும் சுருதி, யுக்தி, அனுபவம் மிக முக்கியமாகும். சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட கிரக அமைப்பு உள்ளவர்களுக்கு காதல் திருமணம் நடந்துள்ளது. அதேநேரத்தில் காதல் கிரக அமைப்புகள் இருந்தும் காதலிக்காமல் இருக்கலாம். அதற்கு வேறு காரணங்கள் உண்டு. குறிப்பாக சூழ்நிலை, சந்தர்ப்பங்கள் அமையாமல் இருக்கலாம். ஆனால் கிரக அமைப்புகள் இரண்டு அல்லது அதற்குமேல் அமையுமானால், நிச்சயம் காதல் திருமணம்தான். திருமண வயது நடைபெறும்போது  கோசார நிலை மற்றும் தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் காதல் செய்யத் தூண்டும், காதல் வயப்பட நேரிடும். காதல் திருமணம் செய்ய அந்த வயதுதான் முக்கிய காரணம். ஆகையால் இத்தகைய கிரக அமைப்பு உள்ளவர்களின் பெற்றோர்கள் முன் கூட்டியே ஜோதிடர்களிடம் கலந்தாலோசித்து எச்சரிக்கையாக இருக்கலாம். பிள்ளைகளின் நடவடிக்கைகளை கவனித்து நல்லதை எடுத்துச் சொல்லி மனதில் பதிய வைக்கலாம். சிலருக்கு நல்ல தசாபுக்திகள் நடந்து வந்தால் சொல்வதைக் கேட்டு ஓரளவு மனம் மாறக்கூடும். ஏனென்றால் காதலிக்கும் அனைவரும் மணம் முடிப்பதில்லை.

காதல் கொள்வதற்கான கிரக அமைப்புகள்

காதல், கலப்புத் திருமணங்களுக்கு அவரவர் ஜாதக கிரக நிலைகளே முக்கிய காரணம். இந்தக் கிரக நிலைகள் அமைவதற்கு அவரவர் பூர்வ ஜென்ம கர்மவினையும் பிராப்தமும்தான் காரணம். லக்னாதிபதி, சுக்கிரன், குரு, புதன், ஏழாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி ஆகியோரின் சேர்க்கை, பார்வை, ஜாதகத்தில் அவர்களுக்கு இருக்கும் பலம் ஆகியவைதான் காதல் திருமணங்கள் நடக்கத் தூண்டுகின்றன. கீழ்க்காணும் அமைப்புகள் ஒரு ஜாதகத்தில் இருந்தால் அவை காதல் திருமணத்துக்கு வழிகாட்டுபவையாகும்.

1. எந்த லக்னமாக இருந்தாலும் குரு 2, 7, 8, 12 இடங்களில் தனித்து இருப்பது. குறிப்பாக மிதுனம், கன்னி, தனுசு, மீனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாறு தனித்த குரு இருப்பது காதல் திருமணம் செய்ய காரணமாகும்.

2. ஏழாம் வீடு அல்லது ஏழாம் வீட்டுக்குரியவன் ஆகிய இரண்டு இடங்களில் ராகு-கேது சம்பந்தம் ஏற்பட்டால் கலப்புத் திருமணம்.

3. களத்திரகாரகன் சுக்கிரனுடன் ராகு-கேது சேர்க்கை பெற்றால் காதல் திருமணம்.

4. ஏழாம் இடத்தில் கேது இருந்து, லக்னாதிபதியும், சுக்கிரனும், பலம் குறைந்து இருந்தால் கலப்புத் திருமணம்.

5. லக்னத்தில் ராகு-சனி சேர்க்கை பெற்று குரு பார்வை இல்லையென்றால் காதல் திருமணம்.

6. ஏழாம் வீட்டில் செவ்வாய், ராகு சேர்க்கை காதல் திருமணம்.

7. பன்னிரண்டாம் இடத்தில் உள்ள பலம் குறைந்த குரு குலதர்மத்திற்கு விரோதமான திருமணத்தை ஏற்படுத்துவார்.

8. ஏழாம் அதிபதியும் சுக்கிரனும் சேர்க்கை பெற்று இருவரில் ஒருவர் கேது சாரத்தில் இருந்தால் காதல் திருமணம்.

9. லக்னாதிபதி, சுக்கிரன், ஏழாம் அதிபதி மூவரும் சேர்ந்து 2, 7, 8, 12ல் இருந்தால் பல பிரச்னைகளுக்கு நடுவே திருமணம் நடக்கும்.

10. லக்னத்திலோ அல்லது ஏழாம் வீட்டிலோ சந்திரன் இருந்தால் காதல் கூடிவரும்.

11. சனி-சந்திரன் சேர்க்கை, பார்வை, லக்னாதிபதி பலம் குறைவு ஆகியவற்றால் திருமணத்திற்கு முன்பே தாம்பத்ய உறவு ஏற்படும்.

12. லக்னத்திற்கு ஏழுக்குடையவன் நவாம்சத்தில் குருவின் வீட்டில் இருந்தால் மதம் மாறி திருமணம் செய்விப்பார்.

மேற்கூறிய இந்த கிரக அமைப்புகள்படி, ஜோதிட சாஸ்திர அடிப்படையில் காதல் திருமணம் செய்துள்ளார்கள். இந்த அமைப்புகளுடன் பிறந்தவர்கள் பண்டைய காலங்களில் இல்லையா? அவர்கள் எல்லாம் காதல் திருமணம் செய்தார்களா என்று கேள்விகள் எழலாம். அந்தக்கால கட்டத்தில் ஆண், பெண் சந்திப்பது என்பதே அரிது. அதுவும் பால்ய விவாகமும் நடைபெற்ற காலம். பல குடும்பங்களில் குழந்தைகள் பிறந்த உடனே இது தாய்மாமனுக்கு, அக்கா மகனுக்கு என்று முடிவு செய்து விடுவார்கள். மேலும் சொந்த பந்தங்கள் எல்லாம் ஒரு கட்டுக்கோப்பாக இருந்த காலம். ஆகையால் காதல் திருமணங்கள் மிகவும் அரிதாகவே இருந்தது. கடந்த 50 ஆண்டுகளாக லேசாக வளர்ந்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் வேர்விட்ட இந்த செடி, இந்த காலத்தில் பெரிய மரமாக வளர்ந்துள்ளது. ஆதலால், காதல், கலப்புத் திருமணங்கள் அதிகரித்து உள்ளன.

திருமணம் நடைபெறும் காலம்

காதல் திருமணம் செய்வதற்கு அந்தகால கட்டத்தில் நடைபெறும் தசாபுக்திகள்தான் பெரிதும் காரணமாகின்றன. 2, 5, 7, 8, 12 ஆகிய வீடுகளின் சம்பந்தப்பட்ட தசாபுக்தி, அந்தரங்களில் காதல் திருமணம் அரங்கேறுகிறது. மேலும், ஏழரை சனி, கண்டச்சனி, அஷ்டம சனியின் காலத்திலும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்யும் அமைப்பு ஏற்படுகிறது. சந்திரன், புதன், ராகு கேது தசைகளில் திருமண பந்தம் கூடிவருகிறது; சில விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

 

காதலிப்பவர்களுக்கும் மட்டும்

பொதுவாக ஜோதிடம் காதலுக்கு எதிரியாக பார்க்கிறார்கள், இது உண்மை அல்ல, ஜோதிடம் உண்மையை தான் சொல்லும். உங்கள் உண்மையான காதலுக்கு மிகவும் உதவியாக இருக்கும், உங்கள் தாய், தந்தை சம்மதத்துடன் உங்கள் காதல் வெற்றி பெற வாழ்த்துகிறோம்

காதலிப்பவர்கள் முதலில் சரியானவரை காதலிக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அது ரொம்ப முக்கியம். காதலிப்பது யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம். அது நல்லவர்களுக்கும் வரும், கெட்டவர்களுக்கும் வரும். 5 வருட காதல் முடிந்து போவதும் உண்டு. 10 வருடம் காதலித்து கல்யாணம் செய்து கொள்பவர்களும் உண்டு. பொதுவாக ஏழரை சனி வரும்போதுதான் காதலிக்கிறார்கள். பலரும் அஷ்டமத்து சனி, அர்தாஷ்டம சனி வரும்போது காதலிக்கிறார்கள்.

பொதுவாக தசா புக்தி சரி இல்லாத காலக்கட்டத்தில்தான் காதலிக்கிறார்கள். சரி இல்லாத தசா புக்தி, சரி இல்லாத நேரத்தில் காதலிப்பவர்களின் காதல் நீடிக்காது. சனி இருக்கும் வரை காதலிப்பார்கள். அது முடிந்தவுடன் காதலும் முடிந்துவிடும். அதன்பிறகு ஒரு தெளிவு வரும். மோசமான தசா புக்தி இல்லாத காலக்கட்டத்தில் காதலிப்பவர்களின் காதல் மட்டுமே நீடிக்கும். அந்தக் காதல் தான் கடைசி வரை நீடிக்கிறது. அவர்கள் கணவன் – மனைவியாகி நல்ல குழந்தைகளைப் பெற்று கடைசி வரை அதே காதலோடு வாழ்ந்து காட்டுகிறார்கள். இதே சனி திசையில் வரும் காதல், மோசமான நேரத்தில் வரும் காதல் சரியாக கனியாது.

அதனால் எந்த தசை நடக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். அதைப் பொறுத்து காதல் நீடிக்குமா? நீடிக்காதா என்பதை தீர்மானிக்க வேண்டும். காதலிக்கும் போது கண்ணே, மணியே என்று கொஞ்சிக் கொண்டு, கல்யாணத்திற்குப் பிறகு பார்க்கக் கூடப் பிடிக்காமல் விலகிப் போகுபவர்களையும் நாம் பார்க்கிறோம். எந்த காலக்கட்டத்தில் நமக்கு காதல் உருவாகிறது என்பதைப் பார்த்து அந்தக் காதல் எப்படி முடியும் என்பதை நிச்சயமாகக் கூறலாம்.

 

உங்கள் ராசிக்கு காதல் எப்படி இருக்கும் ?

மேஷம்

இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்..

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.

கடகம்

இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்

கன்னி

கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும், மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

துலாம்

எப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் துலாம் ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது. துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார். எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.

தனுசு

இவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார்.தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்

மகரம்

இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.

மீனம்

மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின் ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர். இவர்களுக்கு கன்னி ராசிக் காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்.