தசை-புக்தி-அந்தரம்

ஒரு ஜாதகரின் வாழ்கை நிறைவான ஆயுள் = 120   வயது வரை.  (தற்காலத்தில் இது சாத்தியம் இல்லை). இதை தீர்க்க ஆயுள் என்று சொல்லுவார்கள். ஒவ்வொரு யுகாதி யுகங்களுக்கும் இது மாறுபடும். அதாவது யுகங்கள் நான்கு.  கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் .   கிருத யுகத்தில் 400 ஆண்டுகள் மனிதர்கள் வாழ்த்தாக புராணங்கள் சொல்கிறது. அது குறைந்து கொண்டே வந்து கலி யுகத்தில் 100 வருடம் வாழ்ந்தால் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. தற்போதைய சராசரி மனித ஆயுள் 80 வயது.  இன்னும் ஆயிரம் வருடம் கழித்து சராசரி வயது 60 ஆக குறைந்தால் ஆச்சர்யபடுவதற்கு ஒன்றும் இல்லை.  இதைதான் யுக சாஸ்திரம் தெளிவாக கூறுகிறது. அதாவது யுகம் முடிய முடிய மனித ஆயுள் குறைந்து கொண்டே செல்லும்.

ஆக ஒரு மனித ஆயுளை ஒன்பது பகுதிகளாக பிரிப்பதே தசை.

இந்த ஒன்பது பகுப்பு சம காலமாக இருக்காது. ஏனென்றால் சூரியனை ஒவ்வொரு கிரகங்களும் சுற்றி வரும் காலம் சமமாக இல்லை என்பதால்.  ஆனால் அது ஒரு வரிசை கிரமமாக கணிக்கப்படுகிறது. கீழே உள்ளவை தான் அந்த வரிசை அமைப்பு. அதை பூரண ஆயுள் 120 வயது என்று கணிக்கப்படுகிறது. இதில் ஒன்பது கிரகங்களின் தசையும் அனைவரும் தாண்டுவது தற்போது இல்லை.  அதாவது சில தசைகள் சிலருக்கு (பலருக்கும்) வருவதே இல்லை.  ஒருவர் பிறந்த நேரத்தில் கர்ப்ப செல் நீக்கி இருப்புக்கட்டப்பட்ட தசையே ஆரம்ப தசை என கொள்ளப்படுகிறது என்பதால் ஆரம்ப தசை முதல் ஒன்பது தசை என்பதே ஆயுள்காலம் நடைபெறும் தசை.

கேது தசை                      =       7   வருஷங்கள்
சுக்கிரன் தசை               =     20   வருஷங்கள்
சூரிய தசை                     =      6    வருஷங்கள்
சந்திரன் தசை               =     10  வருஷங்கள்
செவ்வாய் தசை          =        7   வருஷங்கள்
ராகு தசை                       =      18  வருஷங்கள்
குரு தசை                       =       16  வருஷங்கள்
சனி தசை                       =       19  வருஷங்கள்
புதன் தசை                    =       17 வருஷங்கள்

ஆக மொத்தம்                 =      120 வருஷங்கள்.

ஒரு தசையை ஒன்பது பகுதிகளாக பகுப்பதுதான் புக்தி:

அதாவது ஒன்பது கிரகங்களும் ஒவ்வொரு தசையின் காலத்தில் புக்தியாக பங்கெடுத்து பரிபாலனம் செய்யும். ஒரு தசை 10 வருடம் என்றல் அதில் ஒன்பது சமம் இல்லாத காலமாக புக்திகள் பிரிக்கபடுகிறது.  அதில் எந்த ஒரு தசையும் தனது புக்தி கொண்டு ஆரம்பிக்கும். அதாவது ராகு தசை என்றால் அதில் ராகு புக்தி முதலில் தொடங்கும் (தனது புக்தி ). அதாவது தனது கிரகத்தின் பங்களிப்பை முதலில் செய்து விடும். அதன் பின்பு மேலே உள்ள வரிசை படி, குரு புக்தி, சனி புக்தி, புதன் புக்தி, கேது புக்தி, சுக்கிர புக்தி என தொடரும்.  அதேபோல் புதன் தசை என்றால் முதலில் புதன் புக்தி, (தனது புக்தி ) அதன் பின்பு வரிசையாக கேது புக்தி, சுக்கிர புக்தி, சூரிய புக்தி என ஒன்பது புக்திகளும் நடந்து வரும்.

ஜோதிட துறையில் வழமையாக சொல்லுவது என்னவென்றால் எந்த ஒரு தசையில் தனது புக்தி ஒருவருக்கு நல்லதை செய்கிறதோ அந்த தசையில் மற்ற புக்திகள் கெடுதல் செய்யும். அதாவது கொடுத்து கெடுப்பது. ஆக ஒரு தசையின் தனது புக்தி காலமானது பலருக்கு நல்லது செய்யாமல் கெட்டதும் செய்யாமல் மந்தமாக அல்லது நடுத்தரமாக நடந்தால் மற்ற புக்திகள் விசேஷமாக இருக்கும் என்று சொல்லுகின்றனர்.

ஒரு புக்தியை ஒன்பது பகுதி காலங்களாக பிரிப்பது தான் அந்தரம்.

எப்படி தசையில் ஒன்பது பகுதி புக்தியோ அதுபோல் புக்தியில் ஒன்பது பகுதிதான் அந்தரம்.  அதாவது ஒரு தசை நடந்தால் ஒன்பது கிரகங்கள் புக்தியாக பங்கு கொள்கிறதோ அதேபோல் ஒரு புக்தியில் ஒன்பது பகுதிகளாக அந்தரம் என்ற காலம் பங்கேடுக்கிறது.

உதாரணமாக ஒருவருக்கு குரு தசை நடக்கிறது என்றால் முதலில் குரு புக்தி,  சனி புக்தி, புதன் புக்தி, என ஒன்பது கிரகங்கள் தொடரும். அதுபோல் அந்த குருதசையின் குரு புக்தி எடுத்துக்கொண்டால் குரு அந்தரம், சனி அந்தரம், புதன் அந்தரம் என ஒன்பது கிரகங்களும் அந்தரம் காலமாக செயல்படும்.

ஆக ஒரு மனிதனின் ஆயுள் =  9 தசையாக பிரிக்கப்பட்டு  ஒவ்வொரு தசைக்கும் ஒன்பது புக்திகளாக பிரிக்கப்பட்டு ஒன்பது புக்திகளுக்கும் ஒன்பது அந்தரங்களாக பிரிக்கப்படும் கால புருஷன் ஒருவரின் வாழ்வை நிர்ணயிக்கின்றான்.

இதில் பெரும்பாலும் யாரும் அனைத்து தசைகளை நிறைவு செய்வது இல்லை.  70 வயது ஆயுள் என்றால் 3 அல்லது 4 தசைகள் நடக்காமலே ஆயுள் முடிந்து விடும்.

மேலும் ஒரு கிரகம் ஒரு ஜாதகத்தில் நல்ல பலம் பெற்றால் அந்த தசை முழுவதும் நல்லதே நடக்கும் என்றும் சொல்ல இயலாது. என் என்றால் புக்தி என்ற பங்களிப்பு ஓவ்வொரு தசையிலும் அனைத்து கிரகங்களுக்கும் உள்ளது. அதைவிட அந்தரம் என்ற பங்களிப்பும் அனைத்து கிரகங்களுக்கும் உள்ளது.

எனக்கு குரு தசை நடக்கிறது எனக்கு ஜாதகத்தில் குரு உட்சமாக இருக்கிறது நல்ல பலன் நடக்கும் என்று நினைக்ககூடாது. குரு தசையில் சனி புக்தி சேவை புக்தி கேது அந்தரம் என்று வரும் அல்லவா அப்போது நம்மை போட்டு பார்த்து விடும்.

சனி எனக்கு ஜாதகத்தில் கெட்டு  போய் உள்ளது சனி தசை முழுவதும் கேடுதலே நடக்கும் என்று கலங்க வேண்டாம். அதில் நல்ல கிரகங்கள் புக்தி மற்றும் அந்தரம் நடக்கும்போது மூச்சு விட வாய்ப்பு வரும்.

சில ஜாதகங்களில் இயற்கையான கெட்ட கிரகங்கள் நல்ல பலனையும் இயற்கையான நல்ல கிரகங்கள் கேட்டபலனையும் தருவதை கண்கூடாக பார்க்க இயலும்.  அதாவது அந்த கிரகம் அந்த ஜாதகத்தில் என்ன தகுதியும் பலமும் பெற்று உள்ளது என்பதை பொறுத்து பலன் நடக்கும்.

அப்பறம் எதுக்கு ஜாதகம் பார்க்கணும் என்கிறீர்களா….. நம்மை மீறி நடக்கும் சில விஷயங்கள் கிரகங்களின் கட்டுபாட்டில் உள்ளது என்பதை உணர்ந்து கொண்டு பிரார்த்தனை செய்து கொண்டு வாழ்ந்தால் சிறப்புதானே.

கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு ” செய்தாருக்கு செய்த வினை” அதாவது நாம் என்ன செய்கிறோமோ அதற்க்கு உண்டான பலன் கட்டாயம் உண்டு”  Each and every action has simultaneous reaction” …

அதையும் தாண்டி புனிதமாக ஏதாவது நடக்கும்போதுதான் ஜாதகத்தை நம்ப வேண்டி உள்ளது.

தசை புக்தி அந்தர கணிதம் இங்கு வேண்டாம்..  குழப்பம் அதிகமாகும். வேறு ஒரு பக்கத்தில் எழுதப்படும்.