வம்சம் செழிக்க குலதெய்வ வழிபாடு!

குலதெய்வத்தை வணங்குங்கள். உங்கள் வம்சத்தை காக்க முதலில் ஓடி வரும் காவல் தெய்வமே குலதெய்வம்தான்.
குலதெய்வத்தை திருப்திப்படுத்துவது ஆடி மாதத்தில்தான். அவரவர் குல வழக்கத்தின்படி குலதெய்வத்தை வணங்கும் முறையை கடைபிடிப்பதுதான் சிறப்பு. பலர் தங்கள் குலதெய்வத்தின் கோயிலுக்கு சென்று, தங்களின் தெய்வத்திற்கு பிடித்த உணவை சமைத்து படைப்பார்கள். சிலருக்கோ தங்கள் குலதெய்வம் எங்கே இருக்கிறது என்று தெரியாது. அப்படியே தெரிந்திருந்தாலும், வருடா வருடம் அவர்களால் குலதெய்வ கோயிலுக்கு சென்று வணங்க முடியாத சூழ்நிலை இருக்கும்.
இதற்கு தீர்வு என்ன?
ஆடி மாதமே குலதெய்வ வழிபாட்டுக்கு விசேஷ தீர்வாக அமைகிறது.
ஒவ்வொருவரின் குல வழக்கம் வெவ்வேறு விதமாக இருக்கும். சிலர் கடா வெட்டி பூஜை செய்வார்கள். அல்லது மீன், முட்டை, கருவாடு போன்றவற்றை சமைத்து படைப்பார்கள். இது அந்த குலதெய்வத்தின் ஸ்தல வரலாறு படித்தால் தெரியும்.
ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஒரு சிறப்பு பூஜைமுறை இருக்கிறது.

உடல் பிணி போக வேண்டும் என்றால்,  கும்பகோணத்தில் இருக்கும் வலங்கைமான் மாரியம்மனிடம் வேண்டுவார்கள். வேண்டிக்கொண்டவரின் உடல்நிலை சரியானதும் பாடைகட்டி அதன் மீது அந்த நபரை படுக்க வைத்து ஆலயத்தை வலம் வருவார்கள் என்கிறது ஸ்தல புராணம்.
அதுபோல, கொல்லங்கோடு பத்ரகாளி அம்மனிடம், புத்திர பாக்கிய தடை உள்ளவர்கள், தங்களுக்கு பிள்ளை வரம் வேண்டும் என்று வேண்டுவார்கள். பிள்ளை வரம் கிடைத்ததும், அந்த குழந்தையை கோயிலுக்கு அழைத்து வந்து நேர்த்தி கடனை செலுத்துவார்கள். அந்த நேர்த்தி கடன் விசித்திரமாக இருக்கும். கோயிலின் திருவிழா நாட்களில் வந்து 40 அடி உயரம் கொண்ட வில்லில் இரண்டு தூக்கக்காரர்கள், அதாவது ஒரு வில்லில் தொங்கியபடி குழந்தைகளை தூக்கி கீழே இறக்குவார்கள்.
இவர்களை தூக்கக்காரர்கள் என்று அழைக்கிறார்கள். அந்த குழந்தையை தூக்கும் முன் தூக்ககாரர்கள் விலாப்புறத்தில் வெள்ளி ஊசியால் குத்தி ஒரு துளி உதிரம் எடுத்து, அதை ஊசியுடன் ஒரு தண்ணீருள்ள பாத்திரத்தில் போடுவார்கள். இப்படி ஆயிரம் தூக்கக்காரர்களின் இரத்தத்தை விழா முடிந்ததும் தூக்கும் வண்டியின் அருகில் கொட்டுகிறார்கள். இந்த பூஜையின் பெயர், “குருதி தர்ப்பணம்” என்று ஆலய ஸ்தல புராணத்தில் இருக்கிறது.
இப்படி ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு பூஜைமுறைகள் இருப்பதுபோல, அவரவர்களின் குலதெய்வத்திற்கும் பூஜைமுறைகள் இருக்கிறது.
நம் முன்னோர்கள் அசைவம் படைத்து வேண்டி இருந்தால் அதை பின்பற்றுவதில் தவறு இல்லை. ஒருவேலை இப்போது இருக்கும் தலைமுறை அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி இருந்தால் குலதெய்வத்திற்கு சைவம் படைக்கலாம்.
ஆனால் வாரா வாரம் அசைவத்தை மூக்கு பிடிக்க சாப்பிட்டு, வருடத்திற்கு ஒருமுறை உங்கள் குலவழக்கப்படி  குலதெய்வத்திற்கு படையல் போடவில்லை என்றால் அது மிக பெரிய தெய்வ குற்றம்.
ஈசனின் சாபத்தால் பார்வதிதேவி பூலோகத்தில் தண்டுறைப்பாக்கம் என்ற ஊரில் புன்னை மரத்தின் நிழலில் பெண் குழந்தையாக தோன்றி அழுதபோது,  அந்த ஊரின் மீனவ தலைவர் சுதர்மன் அக்குழந்தையை தன் குழந்தையாக எண்ணி “கயற்கண்ணி” என்று பெயர் வைத்து வளர்த்து வந்தார்.
கயற்கண்ணி, மீன் வலையை தொட்டு கொடுத்தால் அன்று கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் வலையில் நிறைய மீனகள் அகப்படும் என்று திருவிளையாடல் புராணத்தில் இருக்கிறது.
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் பக்தன் வீரா என்ற மீன் பிடிக்கும் தொழிலாளி, கடலில் வலை விரித்து அதில் சிக்கிய மீன்களில் ஒரு மீனை அன்னைக்கு படையலாக படைத்தார் என்கிறது மேல்மலையனூர் ஸ்தல புராணம்.
அசைவத்தை காளி ரூபத்தில் அம்மன் ஏற்றுக்கொள்கிறாள் என்று தெரிகிறது. உங்கள் குலதெய்வத்தின் ஸ்தல புராணம் தெரியவில்லை என்றால், உங்கள் சொந்தத்தில் இருக்கும் பெரியவர்களிடம் கேட்டு தெரிந்து, பூஜை செய்யுங்கள். அதுவும் ஆடி மாதம் பூஜை செய்தால் வம்சம் செழிக்கும்.
குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது.

பெண்களின் குலதெய்வம்

பெண்களுக்கு திருமணமான பிறகு, தங்கள் பிறந்த வீட்டு குலதெய்வத்தை தொடர்ந்து வழிபடுவதா, கணவர் வீட்டு குலதெய்வத்தை ஏற்பதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. திருமணத்துக்குப் பிறகு, கணவர் வீட்டு குலதெய்வத்தையே இவர்கள் தங்கள் குலதெய்வமாக ஏற்க வேண்டும். அதற்கே முதலிடம் தர வேண்டும். அதேநேரம், பிறந்த வீட்டு குல தெய்வத்தையும் இவர்கள் கணவர், குழந்தைகளுடன் சென்று வழிபட்டு வரலாம். இரட்டிப்பு பலன் கிடைக்கும்.

குழந்தைகளுக்கு குல தெய்வக் கோயிலில் முதல் மொட்டை அடிக்க வேண்டும் எனக் கூறுவது ஏன்?

ஒவ்வொரு குடும்பத்தினரும் அவர்களது குலதெய்வத்தை பரம்பரை பரம்பரையாக வணங்கி வருகின்றனர். அந்தக் குடும்பத்தினருக்கு அந்த தெய்வம் மிகப் பரிச்சயமானதாக இருக்கும். கடந்த காலங்களில்  ஏற்படும் தகராறுகளை தீர்த்து வைக்கும் இடமாக குலதெய்வக் கோயில்கள் விளங்கின.ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்காக உருவாக்கப்பட்ட குலதெய்வக் கோயில், அவர்களின் சந்ததிகளுக்கு பரம்பரை பரம்பரையாக முழுமுதற் கடவுளாக விளங்குகிறது. அதனால்தான் அந்த சமூகத்தில் எந்த சுபகாரியம் நடந்தாலும் முதலில் குலதெய்வத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

உதாரணமாக திருமணம் என்று எடுத்துக் கொண்டாலும், முதல் பத்திரிக்கை குல தெய்வத்திற்கு வழங்கப்படுகிறது. இது குழந்தைக்கு முதல் மொட்டை அடிப்பதற்கும் பொருந்தும். ஒரு குழந்தைக்கு, குல தெய்வக் கோயிலில் முதல் மொட்டை அடித்தால், அந்தக் குழந்தை ஆரோக்கியமாக வளரும் என்று நம்பப்படுகிறது.
தடைகளை விலக்கும் பரிகாரம் :
எடுக்கும் முயற்சியில் தடை ஏற்பட்டுக்கொண்டே இருந்தால், அந்த தடைகள் விலக குலதெய்வத்தை நினைத்து ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துணியில் முடித்து வைத்து, மனதால் குலதெய்வத்தை பிரார்த்தனை செய்தால், தடை விலகி விரைவில் நல்ல பலனை காணலாம்.
அதுபோல உடல் உபாதைகள் இருந்தால் அந்த உடல் உபாதைகள் விலக, மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் நாணயத்தை கட்டி குலதெய்வத்தை மனதால் பூஜித்து உடல் உபாதைகளால் அவதிப்படுபவர்களின் வலது கையில் கட்டினால், குலதெய்வத்தின் சக்தியால் உடல் உபாதைகள் பெரிய பிரச்னையில்லாமல் விரைவில் உடல் நலம் பெறுவார்கள்.
தலைவாசல் காலிலும், பூஜை அறையிலும்தான் தன் குல மக்களை காக்க குலதெய்வம் வாசம் செய்கிறது. அதனால்தான் நம் முன்னோர்கள் வாசல்படியிலும், வீட்டின் பூஜை அறையிலும் அவரவர் குலவழக்கத்தின்படி மஞ்சள், குங்குமம் வைத்து தீபாரதனை செய்ய வேண்டும் என்று ஒரு விதியாக சொல்லி வைத்தார்கள். குலதெய்வத்தை வணங்குங்கள். உங்கள் வம்சத்தை காக்க முதலில் ஓடி வரும் தெய்வமே குலதெய்வம்தான்.