12 லக்கினங்களுடைய பொதுவான பலன்கள்

மேஷ லக்னம்: இந்த லக்ன காரர்களுக்கு, செவ்வாய் அதிபதியாக வருவதால் அவரின் பலம் இவரிடம் தெரியும். இவருக்கு, சுக்ரன் 2, 7-க்கு அதிபதியாக வருவதால் செல்வத்தையும், மனைவியையும் இவர் தான் தருவார். எனவே இவர் யோகாதிபதி அந்தஸ்து பெற்றுவிடுவார். இருந்தாலும், இவரே மாரகாதிபதியாக வருவதால் இவருடைய உயிரை எடுப்பவரும் இவரே. மேலும், சூரியன், குரு சந்திரன் போன்றவர்கள் முழு சுபர வருகிறார்கள். சனி இவருக்கு அதிகமான பாதகமான செயல்களை செய்வார், இருந்தாலும் உத்தியோகம் தருபவர் இவரே. புதன் இவரது எதிரியாக இருக்கிறார்.

ரிஷப லக்னம்: சுக்ரன் அதிபதியாக வருவதால் இவரிடம் சுகர பலம் இருக்கும். இவருக்கு, 8,11-க்குரிய குரு மாபெரும் எதிரியாக வருகிறார். செவ்வாய் மனைவியை தந்தாலும், இவரின் உறக்கம் செவ்வாயின் கையில். புதன் அருமையான நண்பராக உள்ளத்தால், அதிக நன்மை செய்பவர் இவரே. சந்திரன் ஒருவிதத்தில் இவருக்கு தொந்தரவே செய்வார். சூரியன் எதிரியாக இருந்தாலும் சுகம் தருபவர். சனி நல்லவர் வரிசையில் அமருகிறார்.

மிதுன லக்னம்: புத்திசாலி புதன் இவரது அதிபதி. சந்திரன் எதிரியாக இருந்தாலும் குடும்பத்திற்கு அங்கம் இவரே. சூரியன் இயற்கையில் நண்பர் என்பதால் அதரவு உண்டு. சுக்ரனும் முதல் தர யோகாதிபதி, இருந்தாலும் விரையாதியாக இருப்பதால் அடம்பர செலவு செய்ய வைப்பர். அதி பயங்கரமான தீயவர் வரிசையில் முதலில் நிற்ப்பவர் குரு, அவரை தொடர்ந்து செவ்வாய் வருகிறார். சனி இவருக்கு நோய்களை தந்து, காப்பாத்துபவரும் இவரே.

கடக லக்னம்:அமைதியின் இருப்பிடம் சந்திரனே இவரின் அதிபதியாக இருந்தாலும், சில நேரங்களில் கடல் அலைகள் கொந்தளிப்பது போல் ஜாதகரை கொந்தளிக்க வைப்பவரும் இவரே. சூரியன் இவருக்கு சுள் என்ற பேச்சை தந்து குடும்பத்தை தருபவர். குருவும் செவ்வாயும் நிறைய யோகபலன்களை செய்வார்கள். புதனும், சுக்ரனும், சனியும் எதிரிகளின் வரிசையில் இடம் பிடித்து கொண்டனர். சுக்ரன் தசை சூப்பர் என்று இவருக்கு இருந்தாலும், கடைசியில் இவரை கேவலமாக்கும் அல்லது படுக்க வைத்துவிடும்.

சிம்ம லக்னம்: சிங்கத்தின் சிறப்பு இவரிடம் இருக்க இவரின் அதிபதி சூரியனே. புதன் மிக்க நல்ல பலன் தருவர். சந்திரன் சந்தோஷம் கொடுப்பார். சனி மனைவியை தந்து, படாதபாடு படுத்துவார். குரு செவ்வாய் நல்லதே செய்வார். செவ்வாய் முதல் தர யோகாதிபதி. சுக்ரன் எதிரி போர்வையில் இருந்தாலும் தொழில் சிறக்க உதவுவார். இருந்தாலும் சுக்கரனை ஒரு அடி தள்ளியே இவர் வைப்பது இவருக்கு நன்மை தரும்.

கன்னி லக்னம்: லக்னாதிபதி புதன் தொழில் தந்து மேன்மை செய்வார், இவரை விட சுக்ரன் உண்மையில் சூப்பர் இவருக்கு மட்டுமே.சூரியன் ஓரளவு பரவாயில்லை. சந்திரன் இவரை உண்டு இல்லை என செய்வார். செவ்வாய்யோ இவரை கொல்லுவதற்கு கங்கணம் கட்டி கொள்ளுவார். குரு பாதகாதிபதியாக வருவதால் பாதகங்கள் பல செய்து மனைவியை தருவார். சனி யோகாதிபதி என்று கூறினாலும் நோய் மேல் நோய் தருபவரும் இவரே.

துலா லக்னம்: இவர் அதிபதி சுக்ரனே ஆயுளை தருவதால் நல்லவரே. புதன் யோகாதிபதி அந்தஸ்து அடைகிறார். குரு 3.6-க்கு உள்ளதால் தொல்லை தருவதில் முதல் வரிசையில் நிற்பார். செவ்வாய் குடும்ப, மனைவி தந்தாலும், மனைவி அதிகாரம் அதிகரிக்கும். சூரியன் இரண்டாம் தர வரிசையில் தொல்லை தர காத்திருப்பார். சந்திரன் அருமையான தொழிலை தருவார். சனி யோகாதிபதி யாக வந்து நிறைய நிலபுலன்களை கொடுத்து சமுதாயத்தில் தலை நிமிர வைப்பர். சனியின் நன்மை சந்தோஷத்தை எப்பொழுதும் தந்து கொண்டே இருக்கும்.

விருச்சிக லக்னம்: செவ்வாய் அதிபதி என்றாலும் 6-ம் வீட்டின் ஆதிபத்யம் உள்ளதால் வெற்றி கொடி கட்டுவார். குரு குடும்பம் & பிள்ளைகளை உயர்த்தும் யோகாதிபதி. சூரியன் ஒரு நல்ல அரசாங்க பலத்தை தருவார். சந்திரன் சராசரி சுபரகிறார். சுக்ரன் மனைவியை தந்து இன்பத்தையும் தருவார், ஆனால் மனைவி வகையில் செலவுகளை ஏற்படுத்துவார்.சனியும் சில நன்மைகளை செய்து விடுவார். ஆனால் புதன் உண்டு இல்லை என்று பாடாய் படுத்தி இவரின் கௌரவத்திற்கு அடிகடி பங்கத்தை உண்டுபண்ணுவர்.

தனுசு லக்னம்: குரு அதிபதி மற்றும் சுகத்தை தருபவர். சனி குடும்பத்தை தந்து பணம் பற்றாக்குறைக்கும் காரணமாக விளங்குவார். செவ்வாய் 5,12-க்கு உரியவர் என்பதால் பிள்ளை பிறப்புக்கு உறுதியாகிறார். சுக்ரன் மாபெரும் விரோதியாக இருப்பார், சுகர தசை சுகம் தருவது போல் தந்து வேதனையை விளைவிப்பார். புதன் மனைவி மூலமாகவும், தொழில் இடங்களிலும் பாதகம் தருவதோடு மரியாதையை சீர்குலைக்க முற்படுவார். சந்திரன் அஷ்டமாதி என்றாலும் கவலை இல்லை. சூரியன் சமுதாயத்தில் புகழ் பெற செய்து விடுவார்.

மகர லக்னம்: சனி அதிபதி & குடும்ப பொறுப்பில் உள்ளதால் இவர் இஷ்டம் போல் குடும்பம் அமையும். சுக்ரன் & புதன் சுப பலம் அதிகம் தந்து செல்வ செழிப்பை தந்துவிடுவார்கள்.சூரியன் தொல்லை மீது தொல்லையாக தந்து கொண்டே இருக்கும். செவ்வாய்யோ பாதகாதி. சந்திரனோ மனைவியை தந்தாலும், உயிரை வாங்க தயாராக இருப்பார்.குருவால் சில ஆத்ம சந்தோஷம் வரலாமே தவிர, மற்றபடி சுகம் இல்லை.

கும்ப லக்னம்: சனி 1,12-க்கு உரியவர், என்பதால் செலவுகளை மனதிற்குள் கணக்கு போடுவார். குரு நல்ல குடும்பம் மற்றும் சந்தோஷம் தரும். செவ்வாய் நல்ல உத்தியோகம் தருவதோடு வெற்றிக்கு வித்திடுவார். சுக்ரன் சுபிட்சத்தை சொந்தமாக்கி தருவார். புதன் சுக்ரனுக்கு அடுத்தபடி நன்மைகளை தருவார், இருந்தாலும் சில வாதசம்பந்த பிரச்சனை கொடுக்க முயலுவார். சந்திரனும் சூரியனும் கஷ்டம் மேல் கஷ்டம் தருவார்கள், சூரியன் மனைவி அமைத்து தந்து அவளிடம் சில நேரங்களில் தோல்வியை பெறவைக்கலாம்.

மீன லக்னம்: அதிபதி குருவே 1, 10-க்கு வந்து அமைதியான தொழில் தருவார். போதுமான பணம் மட்டும் கிடைக்கும். சுக்ரன் மாபெரும் எதிரி இவரது தசை இவரை தலை கிழாக்கும். புதன் பாதகமான காரியங்களை மட்டுமே செய்வார், இருந்தாலும் மனைவி தருவார்.செவ்வாய் அருமையான பலன் செய்வார். சூரியன் நல்லவர் இருந்தாலும், வியாதியை தராமல் விட மாட்டார். சந்திரன் நல்ல குழந்தைகளை கண்டிப்பாக தருவார். சனி சில லாபங்களை தந்து அதை விட்டிற்கு வருவதற்குள் செலவுகளையும் செய்ய வைத்து விடுவார்.

ராகு, கேது கிரகங்கள் குறிப்பாக சிம்ம மற்றும் கடக லக்ன காரர்களை பாதித்து விடும். இருந்தாலும் இவர்கள் உட்கார்ந்த இடங்களை வைத்தே ஒவ்வொரு லக்ன காரர்களுக்கும், இவர்கள் நன்மை செய்வார்களா தீமை பண்ணுவர்களா என கூற முடியும்.

மேல் சொன்ன பலன்கள் பொதுவானவை மற்றும் தனிப்பட்ட ஜாதகத்தில் கிரகங்கள் நின்ற ராசிகளை வைத்து பார்த்தே முடிவு பண்ணுவது சிறப்பு. மேல் குறிப்பிட்ட லக்ன காரர்களை கிரகங்கள் மேல் சொன்ன படியே நன்மை செய்யும் அல்லது தீமை செய்யும் என்றும் அறுதியிட்டு கூற முடியாது, காரணம், இவர்களுடன், சேர்ந்த, பார்த்த, இவர்கள் உட்கார்ந்த இடங்கள் மற்றும் கிரகங்களை வைத்தே முழு பலன்களை அறிய முடியும்.

 

பன்னிரண்டு லக்னங்களுக்கும் யோகம் தரும் கோயில்கள்

நாம் நட்சத்திரங்களையும் ராசிகளையும் அறிவோம். ‘‘உங்களின் ராசி என்ன?’’ என்று கேட்டால் எல்லோரும் சட்டென்று சொல்லி விடுவோம்.  ஆனால்,  ‘‘உங்களின் லக்னம் என்ன?’’ என்று கேட்டால் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு ஜோதிடர் ராசிக் கட்டத்தை  நோக்கும்போது லக்னம் என்ன  என்றுதான் பார்ப்பார். ஜாதகக் கட்டத்தில் ‘ல’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இடம்தான் அது. உங்களின் மையச்  சக்தி குவிந்திருக்கும் ராசியையே லக்னம் என்று  வரையறுத்திருக்கிறார்கள். இந்த உலகத்தை நீங்கள் எந்த ராசியின் வழியாக, அதன் அதிபதியான எந்த கிரகத்தின் மூலம் சந்திக்கிறீர்கள் என்பதைத்தான் லக்னம்  என்கிறார்கள். ராசி என்பது, சந்திரன் எந்த கிரக வீட்டில் இருந்தபோது  நீங்கள் பிறந்தீர்கள் என்று சொல்வது. ஆனால், லக்னம் என்பது நீங்கள் எந்த  மையத்திலிருந்து வந்திருக்கிறீர்கள் என்றும், உங்கள் வாழ்க்கையை  எந்த மையம் நகர்த்துகிறது என்றும் தீர்மானிக்கிறது.

மரத்தின் ஆணிவேர் போல மனிதனுக்கு லக்னம். உடலுக்கு உயிர்போல என்பதாலேயே,  விதியாகிய லக்னம் மதியாகிய சந்திரன் கதியாகிய சூரியன் என்பார்கள்.  ஏனெனில், ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயிப்பதே லக்னம்தான். ஜாதகத் தின் பிராண மையமே லக்னம்தான். ராசியை வைத்து பலன்களை சொல்லுவதை விட  லக்னத்தை வைத்துத்தான் முழுமையான பலன்களை கூற  முடியும். வாழ்க்கைக் கணக்குகளை தொடங்கும் இடமும் இதுதான். ராசிக் கட்டங்களில் ஆங்காங்கு  கிடக்கிற கிரகங்களின் பலம், பலவீனங்களை,  திறனை லக்னம்தான் தீர்மானிக்கிறது. எனவே, எந்தெந்த லக்னக்காரர்கள் எந்தெந்த கோயில்களுக்குச் சென்றால்  பூரண நற்பலன்களை அடைவார்கள்  என்பது கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது. அந்தந்த கோயில்களுக்குச் சென்று தரிசித்து பயனடையுங்கள்.

மேஷ லக்னம்

கிரகங்களால் ஏற்படக் கூடிய யோகப் பலன்களை முழுமையாக பெறுவதற்கும், அதிர்ஷ்டமான வாழ்க்கை வாழ்வதற்கும் நீங்கள் செல்ல வேண் டியது திருச்சி  மலைக் கோட்டை யிலுள்ள தாயுமானவசுவாமி ஆலயமாகும். அத்தலத்தில் உறையும் தாயுமானவ சுவாமி யையும் மட்டுவார்குழலி  அம்மையையும் தரிசித்து  வாருங்கள். இத்தலம் திருச்சியின் நகர மையத்திலேயே உள்ளது.

ரிஷப லக்னம்

உங்களுக்கு நல்ல நேரமோ கெட்ட நேரமோ எது நடந்தாலும் நன்மை விளையச் செய்வது என்பது இறைவன் கைகளில்தான் உள்ளது. அதிலும்  இயல்பாகவே  சுகவாசியான நீங்கள் இன்னும் சுகமான வாழ்க்கையை வாழ வேண்டுமெனில் திட்டக்குடி எனும் தலத்திலுள்ள சுகாசனப் பெரு மாளையும், வேதவல்லித்  தாயாரையும் முடிந்தபோதெல்லாம் தரிசியுங்கள். சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொழுதூரிலிருந்து  13 கி.மீ., விருத்தாசலத்திலிருந்து 32  கி.மீ.

மிதுன லக்னம்

எல்லாவற்றையும் தாண்டி கிரகங்களை சரி செய்யும் ஆற்றலும், திறனும் இறைவனிடமே இருப்பதால் இறுதியில் கிரகங்கள் இறைவனிடமே  சரணடைகின்றன.  எனவே, நம்மால் ஆன பரிகாரங்களை செய்து கொண்டிருக்கும்போதே இறைவனின் பாதங்களை நினைத்து சரணடைவோம்.  அப்படிப்பட்ட தலமாக நீங்கள் செல்ல  வேண்டியது திருத்தங்கல் ஆகும். இத்தலத்திலுள்ள நின்ற நாராயணப் பெருமாளையும், செங்கமலத்  தாயாரையும் தரிசித்து வாருங்கள். இத்தலம் சிவகாசி –  ஸ்ரீவில்லிபுத்தூர் பாதையில் அமைந்துள்ளது.

கடக லக்னம்

கிரகங்களால் ஏற்படக் கூடிய யோகப் பலன்களை முழுமையாக பெறுவதற்கும், அதிர்ஷ்டமான வாழ்க்கை அமைவதற்கும் நீங்கள் செல்ல வேண்டிய  ஆலயம்,  அம்மன்குடி ஆகும். இத்தலத்திலுள்ள அஷ்டபுஜ துர்க்கையை தரிசியுங்கள். துர்க்கையே, தான் மகிஷனை சம்ஹாரம் செய்த பாவம் போக்க  இங்கே  சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. இத்தலம் கும்பகோணத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது.  கும்பகோணம் –  உப்பிலியப்பன் கோயில் – அய்யாவாடி வழியாக அம்மன்குடிக்கு பேருந்துகள் செல்கின்றன. ஆடுதுறையிலிருந்து தனி வாகனம்  மூலமாகவும் இக்கோயிலை  அடையலாம்.

சிம்ம லக்னம்

உங்கள் லக்னத்தை இயக்கும் மூன்று கிரகங்களால் ஏற்படக் கூடிய யோகப் பலன்களை முழுமையாக பெறுவதற்கும், அதிர்ஷ்டமான வாழ்க்கையைப்   பெறுவதற்கும் நீங்கள் செல்ல வேண்டிய ஆலயம், பழநி முருகன் கோயில். அக்கோயிலுக்குச் சென்று ராஜ அலங்கார முருகனை மறக்காது  தரிசியுங்கள். அல்லது  வீட்டில் ராஜ அலங்கார முருகனின் படத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

கன்னி லக்னம்

பெருமாள் பள்ளி கொண்ட கோலத்தில் அருளும் தலத்தை தரிசிக்கும்போது நிச்சயம் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றம் உண்டாகும். அதிலும்  கடற்கரையோரம்  அருளும் பெருமாளாக இருப்பின் நற்பலன்கள் அதிகரிக்கும். புண்டரீக முனிவரின் பக்தியை மெச்சி மாமல்லபுரத்தில் பெருமாள்  பள்ளிகொண்ட கோலத்தில்  சேவை சாதித்தார். புண்டரீக முனிவரும் எம்பெருமானின் பாதத்தின் அருகே அமரும் பாக்கியம் பெற்றார். இவ்வாறு  சயனத் திருக்கோலத்தில் காட்சி  தந்தமையால் பெருமாள், ஸ்தலசயனப் பெருமாள் ஆனார். சென்னைக்கு அருகே உள்ள மாமல்லபுரத்தில் அமைந் துள்ளது இக்கோயில்.

துலா லக்னம்

எந்த கிரகங்கள் எங்கு இருந்தாலும் சரி, தெய்வ சக்தியை அடிபணியுங்கள். அதிலும் புதனை பலப்படுத்தும் அம்சமாகவே உள்ள பெருமாளை  எப்போதும்  வணங்குங்கள். குறிப்பாக காஞ்சிபுரத்திலுள்ள நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான பச்சை வண்ணப் பெருமாளை அவ்வப்போது  தரிசித்துவிட்டு  வாருங்கள். பச்சை வண்ணப் பெருமாளின் அருளால் புதன் பிரமாண்டமான வாழ்வைத் தருவார்.

விருச்சிக லக்னம்

கிரகங்கள் எப்படியிருந்தாலும் பிராப்தம் எனும் முன்வினைப் பயனை மாற்றியமைக்கும் சக்தி தெய்வத்திற்குத்தான் உண்டு. எனவே, உங்களின்  வாழ்க்கை  யோகமாக மாற நீங்கள் தில்லை ஸ்தானம் என்றழைக்கப்படும் திருநெய்த்தானம் தலத்திற்குச் சென்று வாருங்கள். அத்தலத்தில் அருளும்  நெய்யாடியப்பரையும்,  பாலாம்பிகையையும் தரிசித்து வாருங்கள்.

தனுசு லக்னம்

கிரகங்களால் ஏற்படக் கூடிய யோகப் பலன்களை முழுமையாக பெறுவதற்கும், அதிர்ஷ்டமான வாழ்க்கை வாழ்வதற்கும் நீங்கள் செல்ல வேண்டிய  தலம்  வில்வாரணி முருகன் கோயிலாகும். சகல நட்சத்திரங்களுக்கும் இவர் அருள்பாலிப்பதாக புராண ஐதீகம் நிலவுகிறது. நட்சத்திரங்கள் பூஜிக்கும்  நாயகனாக இந்த  முருகன் விளங்குகிறார். கருவறையில் நாகாபரணத்துடன் முருகப் பெருமானும், சுயம்பு வடிவமான சிவபெருமானும் ஒரு சேர  காட்சி தருகின்றனர். இத்தலம்  திருவண்ணாமலை வேலூர் சாலையில் கலசப்பாக்கத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும், போளூரிலிருந்து 12 கி.மீ.  தொலைவிலும் அமைந்துள்ளது.

மகர லக்னம்

கிரகங்களின் முத்தான நன்மைகள் காலத்தே கிடைத்திட இந்த கிரகங்களை இயக்கும் சக்தியான இறைவனை நாடிச் செல்லுங்கள். அத்தகைய ஒரு  தலம்,  திருநின்றவூர். தாயாரின் பூரண அனுக்கிரகமும், பெருமாளின் பொங்கும் அருளும் நிறைந்த தலம் இது. இத்தலத்தில் கருணையே சொரூபமாக  தாயார், ‘என்னைப்  பெற்ற தாயே’ என்கிற திருநாமத்தோடு அருள்கிறாள். சுதாவல்லி என்கிற திருநாமமும் உண்டு. பெருமாள், பக்தவச்சலன். இத் தலம் திருவள்ளூருக்கு  அருகேயுள்ளது. சென்னையிலிருந்து சென்று வர பேருந்து மற்றும் ரயில் வசதி உண்டு.

கும்ப லக்னம்

உங்களை சுக்கிரன், புதன், சனி போன்ற கிரகங்கள் வழி நடத்துவதால் மறக்காமல் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் உரிய வழிபாட் டை  மேற்கொள்வதும் நல்லதாகும். அதனால் திருப்பதி பெருமாளான வெங்கடாஜல பதியை வருடத்திற்கு ஒருமுறையேனும் தரிசித்து வாருங்கள்.  வீட்டில் பெரிய  அலர்மேல் மங்கைத் தாயார்-திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாள் படத்தை வாங்கி வைத்து வணங்குங்கள்.

மீன லக்னம்

உங்களின் சொந்த ஜாதகத்தில் எத்தனைதான் கிரகங்கள் பலவீனமாக இருந்தாலும் எல்லாவற்றையும் சரி செய்யும் சக்தி தெய்வத்திற்கு உண்டு.  கிரகங்களுக்கு  பிரமாண்ட பலத்தை அளிப்பவையே தெய்வங்கள்தான். எனவே, உங்களின் யோகாதிபதிகள் பூரண பலன்களை கொடுக்க நீங்கள்  செல்ல வேண்டிய தலம்  குறுக்குத்துறை முருகன் கோயிலாகும். இக்கோயில் தாமிரபரணி ஆற்றங்கரையில் மிகவும் ரம்மியமான சூழ்நிலையில்  அமைந்துள்ளது. திருநெல்வேலி சந்திப்பு  ரயில் நிலையத்தில் இருந்தும், டவுன் ரயில் நிலையத்தில் இருந்தும் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  பஸ், ஆட்டோ வசதி உண்டு.