எது தியானம்?

ஒரு பொருள், இறைவன் அல்லது ஆத்மனின் தொடர்ந்த சிந்தனைப் பெருக்கே தியானம். தைலதாரை போன்று கடவுளின், ஒரே எண்ணத்தைச் சதா மனதில் கொள்வதே தியானம். யோகிகள் அதைத் தியானம் எனத் தெரிவிக்கின்றனர். பக்தர்கள் பஜன் என்கின்றனர். ஒரு புள்ளி அல்லது பொருளின் மீது மனதை ஒன்றச் செய்வதே ஒன்றித்தல். இதைத் தொடர்ந்து தோன்றி நிற்கிறது தியானம்.

தியானத்திற்குரிய தேவைகள்:

காலம்: அதிகாலையில் 4லிருந்து 6வரை தியானத்தை அப்பியசியுங்கள். இதுவே தியானத்தைப் பயிலுவதற்கான சிறந்த காலம். சிறிதும் தொந்தரவின்றி உங்கள் மனம் பரிசுத்தமாக இருக்கும் பகல் அல்லது இரவின் அப்பகுதியையே தேர்ந்தெடுங்கள். படுக்கைக்குச் செல்லும் முன் நீங்கள் தியானத்தில் அமரலாம். இந்நேரத்தில் மனம் அமைதியுடன் இருக்கும். ஞாயிறு நாட்கள் விடுமுறை நாட்களாதலால் மனம் சுதந்திரமாக இருக்கும். அன்று நீங்கள் நன்கு தியானத்தில் ஈடுபடமுடியும். ஞாயிறு நாட்களில் தீவிர தியானத்தில் ஈடுபடுங்கள். பால் பழங்களை மட்டும் உணவாகக் கொள்வதாலோ, உபவாசத்தை மேற்கொள்வதாலோ நல்ல தியானம் ஏற்படும். சதா உங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தி தியானத்தினால் பெரும் பயனை அடையுங்கள்.

இடம்: உத்தரகாசி, ரிஷீகேசம், பத்திரிநாராயணன் முதலிய ஆத்மீகச் சூழ்நிலைகள் ஓங்கி நிற்கும் ஏகாந்தமானதும் குளுமையானதுமானதோர் இடம் மன ஒருமைப்பாட்டை ஏற்படுத்த இன்றியமையாதது. எங்ஙனம் நீரில் உப்பு கரைந்து ஒன்றாகிறதோ, அதே போல் தன் அதிர்ஷ்டானமான பிரம்மத்தில், தியானாவஸ்தையிலுள்ள மௌன நிலையில், சாத்துவிக மனம் கரைந்து ஒன்றாகிறது. தனிமையும் தீவிர தியானமும் ஆத்மானுபூதிக்கான இரு முக்கிய தேவைகள், கங்கை அல்லது நர்மதையின் தீரம், இமாலயத் தோற்றம், அழகிய பூந்தோட்டம், புனிதக் கோவில்கள்-இவையே ஒன்றித்தல், தியானத்தில் மனதை உயர்த்தும் இடங்கள். இவ்வரிய இடத்தையே உங்கள் இருப்பிடமாக்கிக் கொள்ளுங்கள்.

ஆசனம்: சித்தாசனம் அல்லது பத்மாசனம் சரீரத்தை நிமிர்ந்து நிற்கச் செய்கிறது. பந்தனங்களும் முத்திரைகளும் உடலை உரப்படுத்துகின்றன. பிராணாயாமம் காயத்தை லேசாக்குகிறது. நாடிசுத்தி மனஒருமைப்பாட்டை ஏற்படுத்துகிறது. இவ்வரிய தகுதிகளைப் பெற்றதும், பிரம்மனிடம் மனதைப் பதியவையுங்கள். அப்பொழுதுதான் தியானம் இலகுவாகவும் சந்தோஷமாகவும் தொடர்ந்து நிற்கும்.

 

மனதை ஒருநிலைப்படுத்துவது எப்படி?

புறப்பொருள்கள் இடைவிடாது மூளையைத் தாக்கிக் கொண்டிருக்கின்றன. புலன்களில் ஏற்படும் பதிவுகள் பொறிவாயில்கள் மூலமாக மூளையை அடைந்து மன எழுச்சியை ஏற்படுத்துகிறது. இப்பொழுது உங்களுக்குப் புறப்பொருள்கள் புலப்படுகின்றன. புலன்களின் மேல் ஏற்படும் பதிவுகளாலுண்டான வெளிப்புறத் தூண்டுகோலாலோ உணர்வு அல்லது நினைவின் மூலம் ஏற்படும் உட்புறத் தூண்டுகோலினாலோ உண்டாகலாம். ஒவ்வொரு தனித்த புலன் மேல் பதிவும் சிக்கலான உணர்ச்சி மூட்டையேயாகும். வெளிப்பாகத்திலிருந்து மூளையை நோக்கிச் செலுத்தப்படுகின்றன உணர்ச்சிகள். மனதின் அடித்தட்டில் ஏற்படும் ஒரு விழிப்புத்தன்மையே உணர்ச்சி. தனித்த புலன்மேல் பதிவிலிருந்து ஏற்படும் விழிப்புகளின் சேர்க்கைகள் மிகவும் சிக்கலானவை. புலன்களின் வழியாக ஏற்படும் மனஎழுச்சிகளை தியான சமயத்தில் வெறுத்தொதுக்குங்கள். எந்தவித கருத்துக்களையும் நினைவுக்குக் கொண்டுவருவதை விட்டொழியுங்கள். வேறு எண்ணமின்றி கடவுளது ஒரே எண்ணத்திலேயே மனோசக்தி முழுவதையும் ஒன்றச் செய்யுங்கள்.

மற்றெல்லா புலன்வழிப் பதிவுகளையும் எண்ணங்களையும் தவிருங்கள். மனத்தின் அடிப்படையில் எழும் எதிர்ச் செயல்களினின்று தோன்றும் சிக்கல்களை அகற்றுங்கள். மனதிலிருந்து ஒரே எண்ணத்தை மாத்திரமே பிரித்தெடுங்கள். மனதில் மற்றெல்லா தொழில்களையும் மூடிவிடுங்கள். இப்பொழுது மனம் ஒரே ஒரு எண்ணத்தினால் மாத்திரம் நிரப்பப்படும். நிஷ்டையும் பின்தொடரும். ஒரு எண்ணம் அல்லது ஒரு செயலைப் பன்முறை செய்தலானது அவ்வெண்ணம் அல்லது செயலின் பூரணத்தன்மைக்கு வழிகோலுவதைப் போல், ஒரே எண்ணத்தின் முறையொன்றைப் பல தடவை செய்தலானது ஒன்றித்தல், தியானம் இவற்றின் பூரணத்வத்திற்கு வழிகாட்டுகின்றன.

கீழ்க்காணும் பிரயோகங்களை கீதையில் பின்வரும் அநேகவிடங்களில் காணலம்.

அனன்ய சேதா; மச்சித்த; நித்யயுக்த; மன்மன; ஏகாக்ரம் மன; ஸர்வ பாவ். இப்பிரயோகங்கள் எல்லாம் நீங்கள் உங்கள் முழு மனதையும் கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டியதிருக்கும் என்பதையே குறிக்கின்றன. அப்பொழுது தான் நீங்கள் ஆத்மானுபூதியை அடைவீர்கள். மனதின் ஒரு கதிர் கூட வெளியே செல்லுமேயாகில் தெய்வீக உணர்வைப் பெறுதல் அசாத்தியம். உங்கள் மனதில் வி÷க்ஷபம் நிலவிநிற்குமேயாகில் தியானத்தில் நிலைத்து நிற்கவும் மனச்சாந்தியைப் பெறவும் உங்களால் இயலாது. மனசஞ்சலமே வி÷க்ஷபமாகும். ரஜஸே வி÷க்ஷபமாகும். மனதில் வி÷க்ஷபமும் ரஜஸும் சேர்ந்தே இருக்கின்றன. நீங்கள் வி÷க்ஷபத்தை ஒழிக்க விரும்பினால் இச்சையடக்கம், இறைவனிடத்தில் ஆத்ம சரணாகதி மூலமாக இவ்வநித்ய ஆசைகளை அறவே ஒழித்துக்கட்ட வேண்டும்.

மனத்தூய்மை: நீங்கள் ஆத்மானுபூதியை அடைய விரும்பினால் பரிசுத்தமான மனதைப் பெற்றிருக்க வேண்டும். ஆசைகள் அவாக்கள், கவலைகள், மயக்கம், கர்வம், காம உணர்ச்சி, பற்றுதல், விருப்பு வெறுப்புகள் முதலியவற்றிலிருந்து மனம் விடுபட்டாலொழிய பரமசாந்தி, மாசற்ற இன்பம், நித்திய வாழ்வு முதலியவற்றின் சாம்ராஜ்யத்தினுள் புக அதனால் இயலாது. மனம் ஒரு பூங்காவனத்துடன் ஒப்பிடப்படுகிறது. உழுதல், உரமிடுதல், களை அறுத்தல், முட்களை நீக்குதல், மரம் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுதல் முதலியவற்றின் மூலமாக நீங்கள் ஒரு தோட்டத்தில் பூ, பழம் முதலியவற்றை அபிவிருத்தி செய்ய முடிவதைப்போல் பேராசை, சினம், கஞ்சத்தனம், மருட்சி, கர்வம் முதலிய அசுத்தங்களை அகற்றி தெய்வீக எண்ணங்களாகிய தண்ணீரைப் பாய்ச்சி உங்கள் மனமாகிய பூங்காவில் பக்தியென்னும் மலரை நீங்கள் உற்பத்தி செய்யலாம். முட்களும் களைகளும் மழை காலத்தில் தோன்றி கோடைக்காலத்தில் மறைகின்றன. ஆனால் அவைகளின் விதைகள் பூமிக்கடியில் மறைந்திருக்கின்றன. ஒரே ஒருதரம் மழை பெய்தவுடன் விதைகள் மறுபடியும் முளைத்துக் குருத்து விடுகின்றன. இதுபோலவே, மனதின் விருத்திகளும் மேல்தளத்தில் தோன்றுகின்றன. பிறகு மறைந்து, சமஸ்காரங்களின் ரூபத்தில் நுண்ணிய விதை நிலையை மேற்கொள்கின்றன. அக அல்லது புறத் தூண்டுகோலினால் இந்த சமஸ்காரங்கள் மறுபடியும் விருத்திகளாகின்றன. களைகள், முட்களின்றி பூங்காவனம் சுத்தமாக இருக்கையில் இனிய பழங்களை நீங்கள் பெறலாம். இதுபோலவே, மனம் சுத்தமாக இருக்கையில் பேராசை, கோபம் முதலியவற்றிலிருந்து விலகி மனம் தனித்திருக்குங்கால், நல்ல ஆழ்ந்த தியானமாகிய பழத்தை நீங்கள் பெறலாம். ஆகவே முதலில் மனதை அதன் அசுத்தங்களிலிருந்து சுத்தப்படுத்துங்கள். பிறகு தானாகவே தியான ஊற்று பெருக்கெடுத்தோடும்.

நீங்கள் ஒரு தோட்டத்தை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க விரும்பினால், களைகள் முட்கள் பிற செடிகள் முதலியவற்றை நீக்குவதோடல்லாமல் மழைக்காலத்தில் மறுபடியும் மறுபடியும் துளிர்விடும் ஏனைய விதைகளையும் நீங்கள் நீக்கவேண்டியிருக்கும். இதேபோல் நீங்கள் சமாதி அவஸ்தையையும், பரிபூரண சுதந்திரத்தையும் பெற விரும்பினால் மனதின் விருத்திகளாகிய பெரிய அலைகளை மட்டும் அகற்றுவதோடல்லாமல், மறுபடியும் மறுபடியும் விருத்திகளை முளைக்கச் செய்யும் பிறப்பிற்குரிய விதைகளான சகாரங்களையும் இல்லாதாக்க வேண்டியதிருக்கும். ஈரமுள்ள பச்சை மரமொன்றிற்கு நீங்கள் தீயிட்டால் அது தீப்பற்றிக் கொள்ளாது. ஆனால் காய்ந்த மரம் ஒன்றிற்கு நீங்கள் தீயிட்டால் அது உடனே தீப்பற்றி எரியும். அதுபோல், தங்கள் மனதைப் பரிசுத்தப் படுத்தாதவர்களால் தியானமாகிய தீயை எழுப்ப முடியாது. அவர்கள் தியானத்திற்கு உட்காருகையில் தூங்கிக் கொண்டோ, உடையை சரிபடுத்திக் கொண்டோ, அல்லது மனக்கோட்டைகள் கட்டிக் கொண்டோ இருப்பர். ஆனால் தங்கள் மனதிலிருக்கும் அசுத்தங்களை ஜபம், சேவை, ஈகை, பிராணாயாமம் முதலியவற்றால் நீக்கியவர்கள் ஆசனத்தில் அமர்ந்த மாத்திரத்திலேயே, தியானத்திலாழ்ந்து விடுவர். நன்கு உலர்ந்தமனம் தியானத்தீயுடன் உடனே தீப்பற்றிக் கொள்ளும். தினந்தோறும் ஒரு தட்டை நீங்கள் கழுவாவிடில் அது ஒளி மழுங்கிவிடும். மனதிற்கும் இதேநிலை தான். ஒழுங்காகத் தியானப் பயிற்சியுடன் மனம் சுத்தமாக வைத்திருக்கப்படாவிட்டால் அது அசுத்தமடைகிறது. தியானம் வியக்கத்தகும் வகையில் மன அழுக்கை நீக்குகிறது. ஆகையினால் ஒழுங்காக விடியற்காலையில் தியானப் பயிற்சியில் ஈடுபடுங்கள்.

எந்த ஒரு ஜீவப்பிராணிக்கும் பேராசை, சுயநலம், வெடுவெடுப்பு, தொந்தரவு முதலியவற்றால் துன்பம் கொடுக்காதீர்கள். சமர்செய்யும் உணர்ச்சியையும் காரசாரமான விவாதங்களையும் விட்டொழியுங்கள். விவாதம் செய்யாதீர்கள். எவருடனும் சண்டை செய்தாலோ அல்லது எவருடனாவது ஒரு காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டாலோ நீங்கள் 3 அல்லது 4 நாட்களுக்கு தியானம் செய்ய முடியாது. உங்கள் மன சமத்வநிலை தடுமாற்றமடைகிறது. உபயோகமில்லாத கால்வாய்கள் மூலம் அதிகமான சக்தி வீணாக்கப்படுகிறது. இரத்தம் கொதிக்கும். நரம்புகள் முறுக்கை இழந்துவிடும். எனவே, எப்பொழுதும் பிரசாந்தமானதோர் மனதைக் கொண்டு விளங்க நீங்கள் உங்கள் முழு முயற்சியையும் செய்ய வேண்டும். அமைதியானதோர் மனத்திலிருந்தே தியானம் தோன்றமுடியம். தூய மனம் தான் உங்களது விலையுயர்ந்த ஆன்மீகப் பொக்கிஷமாகும். உண்மையாகவே தியானத்தில் விரைந்து முன்னேற நீங்கள் விரும்பினால், நீங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். எச்சமயத்திலும் உண்மையையே நீங்கள் மொழிய வேண்டும். பிறர் மனதைப் புண்படுத்தத் தக்க வகையில் எந்த ஒரு சுடு சொல்லையும், அநாகரீக வார்த்தையையும் நீங்கள் மொழிதல் கூடாது. சிறுகவே நீங்கள் பேச வேண்டும். இதுவே உங்களுக்குச் சக்தியளித்து, மனசாந்தியையும் ஆத்மீக பலத்தையும் அளிக்கக் கூடிய வாக்தபஸாகும்.

உங்கள் ஒழுக்கத்தை ஆராயுங்கள். அதில் புலப்படும் தவறொன்றைப் பொறுக்கி எடுங்கள். அதன் எதிரிடையை கண்டுபிடியுங்கள். நீங்கள் கோப குணம் பொருந்தியவர்களாக இருப்பதாக வைத்துக் கொள்வோம். கோபத்திற்கு எதிர் குணம் பொறுமை. பொறுமையின் தனித்த குணத்தில் தியானித்து, இவ்வரிய குணத்தை விருத்தி செய்ய முனையுங்கள். ஒவ்வொரு நாள் விடியற்காலையிலும் நான்கு மணிக்குப் பத்மாசனம் அல்லது சித்தாசனத்தில் அரைமணி நேரம் உட்கார்ந்து மனம் சுற்றித்திரியுங்கால் அதைப் பிடித்திழுக்கும் வகையில் தீவிரமாக சிந்தித்து, பொறுமை அதன் மதிப்பு, உத்வேகத்தின் போது அதை எங்ஙனம் பயிலுதல் முதலியவற்றை ஒவ்வொறு நாளும் ஒவ்வொரு குணத்தின்மீது சிந்தனை செய்ய முனையுங்கள். மனம் ஓடத்தொடங்கும் போதெல்லாம் அதைப் பிடித்திழுத்து நிறுத்துங்கள். உங்களை முற்றிலும் பொறுமையுடையவர்களாகவும், சாந்தஸ்வரூபிகளாகவும் நினைத்து, எனது உண்மை ஆத்மாவான இந்தப் பொறுமையை இன்றிலிருந்து நான் கொண்டு நிற்பேன் என்ற சபதத்துடன் முடியுங்கள். சிறிது நாட்களுக்குக் காணக்கூடிய அளவுக்குள்ள மாற்றங்கள் தோன்றாமலிருக்கலாம். நீங்கள் பழைய முரட்டுக் குணத்திலேயே நின்று வாழலாம். ஒவ்வொரு நாளும் காலையில் நன்கு அப்பியசித்து வாருங்கள். நான் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் அடிக்கடி உருவாகி நிற்கும். தொடர்ந்து அப்பியசித்து வாருங்கள். பொறுமையின்மையுடன் பொறுமையுணர்ச்சியும் சேர்ந்து தோன்றி வருவதுடன் பொறுமையின்øயின் வெளிப்படுகை ஒடுங்கி வரும். இன்னும் தொடர்ந்து அப்பியசியுங்கள். உத்வேக உணர்ச்சிகளெல்லாம் அடங்கி ஒடுங்கி நிற்பதுடன், நெருக்கடி நேரங்களில் பொறுமையானது உங்களது இயற்குணமாகவே அமைந்து விடும். இந்த மாதிரி, இரக்கம், தன்னடக்கம், தூய்மை, பணிவு, பெருந்தன்மை, தாராள மனப்பான்மை முதலிய உயர் பண்புகளை வளர்க்க முற்படுங்கள். மனதின் செயல்களே உண்மையில் கர்மங்கள் எனப்படும். செயலற்ற மனதின் மூலமே உண்மை விடுதலை உருவாகிறது. மனதின் ஆட்டத்திலிருந்து விடுபட்டவர்களிடம் சீரிய நிஷ்டை வந்தடைகிறது. மனம் மாசகன்ற தன்மையை அடைந்ததும், சாந்தியை அடைவதுடன் பிறப்பிறப்பைத் தரும் சம்சார மயக்கங்கள் விரைவிலேயே ஒழிக்கப்படுகின்றன. தூய்மையைப் பெற்ற பின் ஏற்படும் மனஒருமைப்பாடு உங்களுக்கு உண்மை இன்பத்தையும், அறிவையும் அளிக்க வல்லது. இந்த விஷயத்திற்காகவே நீங்கள் பிறந்துள்ளீர்கள். பற்றுதலினாலும், மோகத்தினாலும் நீங்கள் புறப்பொருள்களால் இழுத்துச் செல்லப்படுகிறீர்கள். கடவுளை இதயத்தில் தியானித்து நில்லுங்கள். ஆழ்ந்து தியானியுங்கள். உள்ளந்தரங்கத்தில் இரண்டறக் கலந்து ஒன்றாகுங்கள்.

 

தியானத்திற்குதவும் உணவு வகைகள் !

சாத்துவிக உணவை மிதமாக உட்கொள்ளுங்கள். சாதம், காய்கறிகள், பருப்பு, ரொட்டி முதலியவற்றை அதிகமாக உட்கொண்டு வயிற்றைக் கனமாக்கினால் சாதனை தடைப்படும். சாப்பாட்டு ராமன், புலன்வழி நிற்போன், சோம்பேறி முதலியவர்களால் தியானத்தை நன்கு பயில முடியாது. பாலுணவு சரீரத்தை மிக மிக லேசாக்குகிறது. ஒரே ஆசனத்தில் மணிக்கணக்காக உங்களால் உட்கார முடியும். பலகீனமாகத் தோன்றினால் ஓரிரண்டு நாள் சிறிது சாதம் அல்லது பால் அல்லது பார்லி அல்லது ஏதாவது சிற்றுண்டியை நீங்கள் உட்கொள்ளலாம். சேவை செய்கின்றவர்கள், மேடைப் பிரசங்கங்கள் நிகழ்த்துவோர் மற்றும் தீவிரமான ஆத்மீகப் பிரசாரத்தில் ஈடுபடுகின்றவர்கள் கட்டியான நல்லுணவை நன்கு உட்கொள்வதனால் தடையில்லை.

சிந்தனைக் கலை: நீங்கள் தியானத்துக்கு உட்காரும் பொழுது, நண்பர்கள் அலுவலக வேலை, மாலையில் நண்பர்கள்-உறவினர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை இவைகளின் நினைவு உங்களைத் தொந்தரவு செய்து, உங்கள் மனதின் ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். திரும்பத் திரும்பப் பிடித்திழுத்து மனதை லட்சியத்தில் நிலை நிற்கச் செய்ய வேண்டும். உலகியல் எண்ணங்களை நீங்கள் புறக்கணித்து நிற்க வேண்டும். அவற்றைச் சற்றேனும் சட்டை செய்யாதீர்கள். இவ்வெண்ணங்களை வரவேற்காதீர்கள். இவ்வெண்ணங்களுடன் உங்களை ஒன்றுபடுத்தாதீர்கள். இவ்வெண்ணங்கள் எனக்குத் தேவையில்லை. இவற்றுடன் எனக்கு எவ்விதத் தொடர்பும் கிடையாது, என்று உங்களுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். இவ்வெண்ணங்கள் படிப்படியாக மறைந்து விடும். மனம் ஒரு குறும்புக்காரக் குரங்கு போன்றது. அதை அன்றாடம் ஒழுங்குபடுத்த வேண்டும். படிப்படியாக அது உங்களுக்குக் கீழ்ப்பணிந்து நடக்கும். நடைமுறை அனுபவத்தினால் தான் நீங்கள் தீய எண்ணங்களை அகற்றி நிறுத்தும் சக்தியைப் பெறுவீர்கள். நடைமுறைப் பயிற்சியினாலேயே நல் எண்ணங்களை நிலைத்து நிற்கச் செய்ய உங்களால் இயலும்.

சதா உங்கள் மனதை ஜாக்கிரதையுடன் கண்காணித்து வாருங்கள். விழிப்புடனிருங்கள். பொறாமை, கோபம், பகைமை, காமவிகாரம் முதலிய தீய உணர்ச்சிகளை மனதில் தோன்ற அனுமதிக்காதீர்கள். இந்தக் கறுத்த அலைகள் தியானம், ஞானம், சாந்தி இவற்றின் பெரும் பகைவர்கள். தூய நற்சிந்தனையைக் கொள்வதன் மூலம் இவற்றை உடனேயே அடக்கி நிறுத்துங்கள். பகவந் நாம உச்சாரணம், நற்செய்கை, தீய எண்ணங்களின் விளைவுகளான துன்பங்களின் மூல காரணத்தை ஆராய்தல், நான் யார் என்ற விசாரம், அல்லது தீய எண்ணங்களை அடக்குவதற்கு உறுதி பூண் இச்சா சக்தி முதலியவற்றைக் கொள்வதனால் நிலை நிறுத்தப்படும் நல்லெண்ணங்கள் மூலமாகத் தீயெண்ணஙககளைத் தகர்த்தெறிய வேண்டும். தூய்மை நிலையை அடைந்ததும் தீய எண்ணங்களை மனதில் முளைக்காது. வீட்டின் வாசலிலேயே பகைவனைத் தடுத்து நிறுத்துவது எளிதென்பதைப் போல் தீயஎண்ணம் தோன்றியவுடனேயே அடக்கி விடுவது எளிது. அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அதை வேர்விட அனுமதிக்காதீர்கள்.

ஆரம்பத்தில், தியானத்திற்கு உட்கார்ந்த உடனேயே எல்லாவிதத் தீய எண்ணங்களும் உங்கள் மனதில் தோன்றி நிற்கும். தூய எண்ணங்களைக் கொள்ள முயற்சிக்கும் நேரத்தில் இது ஏன் ஏற்படுகிறது? இதனால் சாதகர்கள் ஆத்மீக சாதனையைக் கைவிட்டு விடுகின்றனர். ஒரு குரங்கை நீங்கள் விரட்டியடிக்க முனைந்தால், அது உங்களைத் தாக்க முயலுகிறது. இதேபோல் பழைய தீய சம்ஸ்காரங்களும், தீய எண்ணங்களும், நல்லெண்ணங்கள் நல்ல சம்ஸ்காரங்கள் முதலியவைகளை நீங்கள் கொள்ள முயற்சிக்கும் போது, உங்களைப் பழிவாங்கும் எண்ணத்துடன் தாக்க பகைவன் உங்களை எதிர்த்து நிற்பதைப் போன்றதே இது. எதிர்ப்பு நியதி இயற்கையோடமைந்தது. மனிதனே! கொடுஞ் சித்தமுடையவனாக இராதே! தொன்று தொட்டே உங்கள் மனத்தொழிற்சாலையில் வாசம் செய்ய எங்களை நீங்கள் அனுமதித்து உள்ளீர்கள். அங்கு தங்க எங்களுக்கு சகலவித உரிமையும் உள்ளது. உங்கள் தீச்செய்கைகளில் எல்லாம் இதுவரையிலும் நாங்கள் உங்களுக்கு எவ்வளவு உதவி புரிந்துள்ளோம்! ஏன் எங்களைத் துரத்திவிடப் பார்க்கிறீர்கள்? நாங்கள் எங்கள் இடத்தைக் காலி செய்யமாட்டோம் என்று பழைய தீய எண்ணங்கள் உறுதியுடன் தெரிவிக்கின்றன. அதைரியமடையாதீர்கள். தீய எண்ணங்கள் தானாகவே தொலைந்து போகும். பிறகு அவை முளைத்தெழவே செய்யாது! நேரிடை எப்பொழுதும் எதிரிடையை வெல்லுகிறது. இதுவே இயற்கையின் நியதி. எதிரான தீயஎண்ணங்களால் நேரிய நல்லெண்ணங்களுக்கு எதிரில் நிற்க இயலாது. தைரியம் பயத்தை வெற்றி கொள்கிறது. சினத்தையும் முற்கோபத்தையும் பொறுமை தோற்கடிக்கிறது.

வெறுப்பை விருப்பு தோல்வியடையச் செய்கிறது. பேராசைத் தன்மையை பரிசுத்தத் தன்மை வெற்றி கொள்கிறது. தியானத்தின் பொழுது மேல்மனத்தில் ஒரு தீயஎண்ணம் தோன்றுகையில், நீங்கள் வருத்தம் சிறிது அடைகிறீர்கள் என்ற உண்மையே நீங்கள் ஆன்மீகத்தில் வளர்ச்சியடைகிறீர்கள் என்பதை உணர்த்துகிறது. அந்நாட்களில் நீங்கள் உணர்ந்தே எல்லாவித தீய எண்ணங்களுக்கும் இடம் கொடுத்தீர்கள். நீங்கள் அவற்றை வரவேற்று போஷித்தீர்கள். உங்களது ஆத்மீகப் பயிற்சிகளை விட்டுவிடாதீர்கள். பிடிவாதமுடையவர்களாகவும் இருங்கள். நீங்கள் வெற்றியையே அடைவீர்கள் என்பது திண்ணம். இடைவிடாது இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு ஜபத்தையும், தியானத்தையும் மந்த நிலையிலிருக்கும் சாதகனொருவன் கூடச்செய்து வருவானேயாகில் தன்னால் வியத்தக்க மாறுதலை அவன் காண்பான். இப்பொழுது இவனால் பயிற்சியை விடமுடியாது. ஒரே ஒரு நாள் தியானப்பயிற்சியை அவன் நிறுத்துவானாகிலும், அந்நாளில் தான் எதையோ இழந்து விட்டதைப் போன்று அவன் உணர்வான். அவனது மனம் முற்றிலும் வருத்தத்துடனிருக்கும்.

ஒரு பெரிய கண்ணாடியையும் அதன்முன் ஒரு ரொட்டித் துண்டையும் ஒரு நாய் முன் வைத்தால், கண்ணாடியில் ஏற்படும் அதன் பிரதிபிம்பத்தைப் பார்த்து நாய் குரைக்கிறது. அங்கு மற்றோர் நாய் இருப்பதாக அது தவறுதலாக நினைக்கிறது. அதேபோல ஜனங்களெல்லாரிடத்திலும் தனது மனக்கண்ணாடியின் மூலம் தன் பிரதி பிம்பத்தையே மனிதன் காண்கிறான். ஆனால் நாயைப்போன்று முட்டாள்தனமாக அவர்களையெல்லாம் தன்னிலிருந்து வேறுபட்டவர்களாகக் கருதி பகைமை, பொறாமை காரணமாகச் சண்டையிடுகிறான். நேர்மையுடன் கூடிய வாழ்க்கையை நீங்கள் நடத்துவீர்களேயானால் ஆழ்ந்த தியானத்தில் புக உங்களால் இயலும். நல்வாழ்க்கையை நீங்கள் நடத்துவீர்களேயானால், விவேகம் முதலிய பிற படிகளையும் உங்கள் மனதில் உருவாக்க நீங்கள் முயற்சி செய்யலாம். மனஒருமைப்பாட்டிற்கு நீங்கள் உங்கள் மனதை விருத்தி செய்யலாம். கடைசியில் தியானத்திலேயே நீங்கள் ஈடுபடலாம். ஒழுக்கமிகும் வாழ்க்கையில் அதிகமதிகம் ஈடுபடுவதாலும், அதிகமாகத் தியானிப்பதாலும் நிர்விகல்ப சமாதியில் திளைத்து நிற்பதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். இவ்வரிய நிர்விகல்ப சமாதியால் ஜனன மரணச் சக்கரத்திலிருந்து விடுவித்து  நித்தியானந்தம் அமர பதவிக்கு உங்களை அழைத்துச் செல்ல முடியும். நன்னடத்தை நியதிகளைக் கைக்கொள்ளாத ஒருவனுடைய மனதில் செய்யப்படும் தியானப் பயிற்சி மோசமான அஸ்திவாரத்தின்மேல் கட்டப்படும் வீட்டை ஒக்கும். மணலின் மீது நீங்கள் வீட்டைக் கட்டலாம். ஆனால் அது கட்டாயம் கீழே விழுந்து விடும். ஒழுக்க அடிப்படையில்லையெனில் வருடக்கணக்காக நீங்கள் தியானத்திலீடு பட்டாலும் ஒரு பயனும் ஏற்பட முடியாது. நீங்கள் வீழ்ச்சியுறுவது திண்ணம். எனவே, ஒழுக்கப்பயிற்சியின் மூலமாக ஏற்படும் மனத்தூய்மை, தியானம், சமாதியில் வெற்றி பெற எண்ணும் ஒருவனுக்கு இன்றியமையாதது. தியானப் பயிற்சியிலீடுபடுவதற்கு முன்னால் நீங்கள் மிகத் தேவையான நேரிய நல்வாழ்க்கையில் நிற்க முயல வேண்டும். உங்களிடம் நல்லறிவு தோன்றி நிற்கவேண்டும். அப்பொழுது தான் நீங்கள் தியானத்தில் வெற்றி பெறுவீர்கள். உண்மையான பயிற்சியைவிட மனதை தியானத்திற்குத் தயார் செய்வதில் தான் காலதாமதம் அதிகமாகிறது. எதிரி எண்ணங்களை விரட்டியடியுங்கள். சதா நேரிடை எண்ணங்களைக் கொள்ளுங்கள். நேரிடை எதிரியை வெல்லுகிறது. நேரிடையில் நிற்கும் பொழுது நீங்கள் நன்கு தியானிக்க முடியும்.

மனம் இடையறாது புலப்பொருள்களில் வசிக்கும் பொழுது இவ்வண்டம் உண்மையானது என்ற எண்ணம் அதிகரிப்பது சத்தியமே. மனம் பரம்பொருளை எப்பொழுதும் நாடி நின்றால் உலகம் ஒரு கனவாகத் தோன்றுகிறது. மனதின் பயனற்ற பல சங்கல்பங்களிலிருந்தும் நீங்கள் உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். இடைவிடாத ஆத்ம விசாரத்தில் ஈடுபடுங்கள். இடைவிடாத என்ற பதத்தைக் கவனியுங்கள். இது மிகவும் முக்கியமானது. அப்பொழுது தான் அத்மீக ஞானம் உருவாகும். சிதாகாசத்தில் ஞானசூரியன் உதயமாவான். தேத்தாங்கொட்டையினால் கலங்கிய நீர் தெளிவடைவது போல் வாசனைகளும் பொய்யான சங்கல்பங்களும் நிறைந்த மனதைப் பிரம்ம சிந்தனையினால் தெளியவைக்க வேண்டும். அவ்வமயமே உண்மையான ஆத்மதரிசனம் ஏற்பட வழி பிறக்கும். இரண்டு முயல்களைத் துரத்திச் செல்லும் மூடமனிதனால் ஒன்றையும் பிடிக்க முடியாததுபோல், எதிரியான இரண்டு எண்ணங்களின் பின் ஓடும் தியானியால் வெற்றியடைய முடியாது. பத்து நிமிடங்களுக்குத் தெய்வீக எண்ணங்களும் பிற்பாடு உலகியல் எண்ணங்களும் ஒருவனிடம் தோன்றி நிற்குமானால், தெய்வீக உணர்வைப் பெறுவதில் அவன் வெற்றி அடையமாட்டான். நீங்கள் ஒரே முயலையே பலமாகப் பின் தொடர்ந்து செல்ல வேண்டும். அதை நீங்கள் பிடிப்பது உறுதி. சதா சர்வகாலமும் நீங்கள் தெய்வீக எண்ணங்களையே கொண்டு விளங்க வேண்டும். அப்பொழுதுதான் கடவுளை விரைவிலேயே காணும் வாய்ப்பைப் பெறுவீர்கள். உப்பு அல்லது சர்க்கரையினால் தண்ணீரை நீங்கள் பூரிக்கச் செய்வது போல் கடவுள், பிரம்மனை பற்றிய எண்ணங்களினாலும், தெய்வீகப் புகழ், சீரிய உணர்ச்சியூட்டும் ஆன்மீக எண்ணங்களினாலும் மனதைப் பூரிக்கச் செய்ய வேண்டும். அப்போது தான் நிரந்தரமாக நீங்கள் தெய்வீக உணர்வில் நிலைநிறுத்தப்படுவீர்கள்.

நிதித்தியாசனத்தில் நீங்கள் ஸ்வஜாதீய விருத்தி பாவத்தை விருத்தி செய்ய வேண்டியதிருக்கும். இரத்தப் பெருக்கைப் போன்று தெய்வீக சாந்நித்தியத்தின் எண்ணங்களை ஏற்படுத்துங்கள். விஜாதீய விருத்தி பாவத்தை திரஸ்காரம் செய்யுங்கள். பொருளின் எண்ணங்களை விட்டொழியுங்கள். விவேகம், விசாரம் என்ற சாட்டையினால் அவைகளை விரட்டியடியுங்கள். ஆரம்பத்தில் தொந்தரவு சிறிது இருக்கும். உண்மையிலேயே அது ஒரு முயற்சியாகும். உங்கள் சக்தி பெருகப் பெருக, பரிசுத்தத்தன்மையிலும், பிரம்ம சிந்தனையிலும் நீங்கள் விருத்தியடைகையில் சாதனை எளிதாகிறது. ஒற்றுமையில் ஓங்கிய வாழ்க்கையில் நீங்கள் இன்புறுகிறீர்கள்; ஆத்மாவிலிருந்து சக்தியடைகிறீர்கள். மனம் ஒன்றித்தபின் உள்சக்தி வளருகிறது. தியானத்தின் பொழுது உங்களால் எவ்வளவு நேரம் உலக எண்ணங்களிலிருந்து அகன்று நிற்க முடிகிறது என்பதைக் கவனியுங்கள். மிக கவனமாக மனதைக் கண்காணியுங்கள். 20 நிமிடங்களுக்கு அது தனித்திருக்குமேயானால் 30 அல்லது 40 நிமிடங்களுக்கு அந்நேரத்தை நீளச்செய்து 2 அல்லது 3 மணி நேரங்களுக்குக் காலவளவை உயர்த்த முயற்சியுங்கள். மறுபடியும் மறுபடியும் மனத்தைத் தெய்வீக எண்ணங்களால் நிரப்புங்கள். இடைவிடாத பயிற்சியினால் மனதைக் கட்டுப்படுத்த முடியும். அதை நீங்கள் தெய்வீக எண்ணங்களால் நிரப்புதல் அவசியம். உங்கள் முயற்சிகளைத் தளர்த்துவீர்களேயானால், வீண் எண்ணங்கள் உடனேயே புகுந்துவிடும். இடைவிடாத பயிற்சியினால் மனதை எளிதிலே கட்டுப்படுத்த முடியும். எளிய உணவுடன் கூடிய இடைவிடாத தியானத்திலேயே சமாதி ஏற்பட வழி பிறக்கும். உலைகளத்தில் ஒரு இரும்புத்துண்டை வையுங்கள். அது தீயைபோன்று சிவப்பாகிறது. தீயிலிருந்து அதை நீக்கி விடுங்கள். அது செந்நிறத்தை இழக்கிறது. அதை செந்நிறமாகவே எப்பொழுதும் வைத்திருக்க விரும்பினால், தீயிலேயே நீங்கள் அதை எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும். இதுபோன்றே, பிரம்ம ஞானத்தீயினால் மனத்தைப் பாதுகாக்க விரும்பினால், இடைவிடாத, ஆழ்ந்த தியானத்தினால் பிரம்மஞானத் தீயுடன் அதை எப்பொழுதும் தொடர்பு கொள்ளச் செய்ய வேண்டும். இடைவிடாத பிரம்ம ஞானத்தை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். பிறகு நீங்கள் சகஜ அவஸ்தையை அடைவது உறுதி.