விளக்கேற்றும் பலன்கள் என்ன?

தீபத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற 3 சக்திகளும் உள்ளன. தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. தீப பூஜை உள்ளத்தின் இருளைப் போக்குகிறது. அதாவது தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. மனதில் உள்ள கவலைகளைப் போக்குகிறது.

காலை 6 மணி முதல் 7 மணி வரை  வீட்டில் தீபம் ஏற்றுவது சர்வ மங்கள யோகம் தரும்.

தினமும் மாலையில் தீபம் வைத்து வணங்கிப் பூஜை செய்ய வேண்டும். பொது இடங்களில் பலரும் சேர்ந்து கூட்டாகத் தீபவழிபாடு செய்யலாம். வீட்டிலே சாமிக்கு முன்னால் சின்னதாக அகல் விளக்கு ஏற்றி, மணி நேரமாவது எரிவதற்கு எண்ணை விட்டு, பூட்டுபோட்டு, தேவியை மனதில் தியானித்துப் பூஜை செய்ய வேண்டும்.

அப்படிச் செய்பவர்களுக்கு வாழ்க்கையில் எல்லாக் கஷ்டங்களும் நீங்கி எல்லாவிதமான சந்தோஷங்களும், சவுபாக்கியங்களும் ஏற்படும். வீட்டிலே நாம் இம்மாதிரி தீபபூஜை செய்யும்போது, பக்கத்திலேயே குழந்தைகளை வைத்துக்கொண்டு செய்ய வேண்டும்.

அவர்களையும் நல்ல சுலோகங்களை பாடல்களைப் படிக்க வைத்து பூஜையில் ஈடுபடுத்த வேண்டும்.

தினமும் காலையிலும், மாலையிலும், வீட்டிலும், வியாபார இடங்களிலும் விளக்கேற்றி வழிபட்டு வருபவர்களின் வறுமை அகலும். லட்சுமியின் அருள் கிடைக்கும்.

ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை மற்றும் பௌர்ணமியன்று திருவிளக்கேற்றி விளக்கு பூஜை செய்தால் கீழ்கண்டபடி பலன்கள் கிடைக்கும்.

சித்திரை – தான்யம் உண்டாகும்
வைகாசி – செல்வம் கிடைக்கும்
ஆனி – விவாகம் நடக்கும்
ஆடி – ஆயுள் விருத்தி
ஆவணி – புத்திரப்பேறு உண்டாகும்
புரட்டாசி – பசுக்கள் விருத்தி
ஜப்பசி – பசிப்பிணி நீங்கும்
கார்த்திகை – நற்கதி உண்டாகும்
மார்கழி – ஆரோக்கிய வாழ்வு கிடைக்கும்
தை – வாழ்வில் வெற்றி கிடைக்கும்
மாசி – துன்பம் அகலும்
பங்குனி – தர்மசிந்தனை பெருகும்

ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும்
இரு முகம் ஏற்றினால் – குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால் – புத்திரதோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால் – செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால் – நற்பலன்கள் உண்டாகும்

சுபகாரியங்களில் குத்துவிளக்கு ஏற்றி வைக்க வேண்டும். இது பித்தளை அல்லது வெள்ளி குத்துவிளக்காக இருக்க வேண்டும். எவர்சில்வர் குத்துவிளக்கு ஏற்ற வேண்டாம்.

குத்துவிளக்கு மும்மூர்த்திகளின் வடிவம். குத்துவிளக்கின் தாமரை வடிவமான ஆசனமாகிய அடிப்பாகம் பிரம்ம அம்சம். நீண்ட தண்டு (நடுப்பாகம்) விளக்கேற்றி வைக்கும்பொழுது அது கிழக்குத் திசை பார்த்து இருக்க ஏற்றி வைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தெற்கு திசை பார்க்க ஏற்றி வைக்கக்கூடாது.

தீபம் ஏற்றினால் சாபம் நீங்கும்

வறுமையினால் துன்பப்படும் குழந்தைகளுக்கு உணவளிப்பது, பசு மாட்டைத் தினமும் பூஜித்தல், வேதம் அறிந்த பெரியோர்களின் ஆசியைப் பெறுதல், சிதிலம் அடைந்த கோவில்களின் புனர்நிர்மாணத்திற்கு உதவுதல் அனாதை பிரேதத்தை, ஈமச் சடங்குகள் செய்ய வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் பொருள், பணம் உதவி செய்தல் போன்ற மகத்தான புண்ணிய காரியங்களின் பலன்கள் மேற்கூறிய தோஷங்களுக்குச் சக்தியுள்ள பரிகாரங்களாகும். கவனிப்பாரின்றி உள்ள கோவிலில் தீபம் ஏற்றி வைப்பது பித்ரு தோஷங்களையும், பித்ருக்களால் ஏற்பட்ட சாபத்தையும் போக்கும் சக்தி வாய்ந்த பரிகாரமாகும்.

விளக்கு பரிகார பூஜை

எலுமிச்சை விளக்கு:

எலுமிச்சம் பழத்தை சாறுபிழிந்துவிட்டு அதன் தோலை விளக்காக்கி, அதில் நெய் விட்டு, ராகுகால நேரத்தில் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள். இதனால் திருமணத்தடைகள் நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும் என நம்புகின்றனர்.

குரு பரிகார விளக்கு:

கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ள ஆலங்குடி குரு தலத்தில் குருபகவானுக்கு இருப்பது நான்கு அகல் விளக்குகளை ஏற்றி இருபத்து நான்கு முறை வலம் வந்து வழிபடுவது குருதோஷ பரிகாரமாக கருதப்படுகிறது.

சனீஸ்வர பகவான் பரிகார விளக்கு:

இரும்பு விளக்கில் நல்லெண்ணெயை ஊற்றி அதிலே கருப்புத் துணியால் மூட்டை போல் கட்டிய எள்ளை வைத்து அந்தத் துணியின் முனையையே திரியாக கொண்டு சனிக்கிழமைகளில் இந்த விளக்கை ஏற்றி வழிபட சனி பகவானின் அருள் கிடைக்கும். இரும்பு நல்ல எண்ணெய், எள், கருப்புத்துணி இவையாவும் சனீஸ்வரபகவானுக்கு மிகவும் பிடித்தமானவை ஆகும்

வார தீப பரிகார பூஜை !

ஞாயிறு:-

ஞாயிற்றுக்கிழமை அய்யப்பனுக்கு நூறு தீபங்கள் ஏற்றுதல் விசேஷம். தீபங்களைத் தாமரைப் பூ வடிவில் ஏற்றுவது மிகவும் சிறப்புடையது. அதாவது தாமரைப்பூ போன்ற அமைப்பில் தீபங்களை வரிசையாக வைத்து ஏற்றுதல் வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யப்படும் இத்தீப வழிபாடுகளுக்குத் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது சிறந்தது. இதுபோன்று தீபங்கள் ஏற்றி வழிபடுவதால் வருமானங்கள் தடையை மீறி வருவதற்கு சந்தர்ப்பம் உண்டு.

திங்கள் :-

திங்கட்கிழமை அன்று இலுப்ப எண்ணெய் கொண்டு ஐம்பத்தாறு தீபங்கள் ஏற்றுதல் விசேஷம். இந்த தீபங்களை அன்னபட்சி வடிவத்தில் வரிசையாய் ஏற்றி வழிபடுதல் வேண்டும். அன்னப்பட்சிகள் போன்று அரிசி மாவு கோலம் வரைந்து அவற்றின் மேல் இத்தீபத்தை ஏற்றுவது மிகவும் சிறப்புடையதாகும். மிகவும் கஷ்டப்படுகின்றவர்களுக்கு மனச் சாந்தியைத் தரும் வழிபாடு இது.

செவ்வாய்:-

செவ்வாய்க்கிழமைகளில், அரிசி மாவுக் கோலம் போட்டு, அதில் தீபம் ஏற்றுதல் வேண்டும். அரிசி மாவில் இரட்டைக்கிளி உருவம் வரைந்து, அதன் மேல் ஐம்பத்து நான்கு தீபங்களை வரிசையாய் ஏற்றுவது விசேஷமாகும். இத்தீபங்களுக்கு பசுநெய் உபயோகிப்பது மிகவும் சிறப்புடையதாகும் இந்த தீப வழிபாட்டால் கணவன், மனைவியர் இடையே தாம்பத்திய உறவு மேம்படும்.

புதன்:-

புதன்கிழமை அன்று இருபத்து மூன்று தீபங்கள் ஏற்றி, அரிசி மாவுக் கோலத்தில் இரட்டைச் சங்கு வரைந்து அதன் மேல் சுற்றியும் தீபங்களை ஏற்றலாம். நல்ல எண்ணெய் தீபங்கள் ஏற்றுவது சிறந்தது. இதனால் குழந்தைகளின் மந்தபுத்தி அகலம்.

வியாழன்:-

வியாழக்கிழமைகளில் தேங்காய் எண்ணெய் கொண்டு ஐம்பத்தி ஏழு தீபங்கள் ஏற்றி, அரிசிமாவினால் சுதர்சன சக்கர வடிவில் கோலமிட்டு அதைச் சுற்றி இத்தீபங்களை வைத்து வழிபடுதல் வேண்டும். இந்த தீப வழிபாடு காரணமாக பகைமை கொண்டுள்ள உறவினர்கள் இணக்கமாவார்கள்.

வெள்ளி:-

வெள்ளிக்கிழமைகளில் அறுபது தீபங்கள் ஏற்றுதல் விசேஷம். மத்தால் கடைந்து எடுத்த வெண்ணையில் நெய்காய்ச்சி தீபமேற்றுதல் மிகவும் விஷேசம். மூன்று உள் வட்டமாகக் சுற்றி தீபமேற்றுவது விசேஷம். இவ்வாறு வழிபடுவதால் இல்லத்தில் அனாவசிய செலவுகள் குறையும். கணவனுடைய ஊதாரித்தனம் நிவர்த்தியாகும்.

சனி:-

சனிக்கிழமைகளில் நல்லஎண்ணை கொண்டு 80 விளக்குகள் அல்லது மொத்தத்தில் 80 தீப முகங்கள் கொண்ட விளக்குகளை ஏற்றுவது விசேஷமாக கருதப்படுகிறது. இந்த தீப பித்ரு சாபங்கள் நீங்கும்.

தோஷம் நீங்க ஏற்ற வேண்டிய தீபங்கள்

தீபம் ஏற்றுவதால் நம் வேண்டுதல் நிறைவேறுகின்றன. தீபம் ஏற்றுவதற்கு பலவித முறைகள் உள்ளன. கடவுளுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் நம் வேண்டுதல்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கின்றன.

மேலும் தோஷம், பாவம் பரிகாரங்களுக்கு என்று உள்ள எண்ணிக்கையில் தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தால் அதன் பலனை விரைவில் அடையலாம். இப்போது தோஷங்களை போக்கும் தீப எண்ணிக்கையை பார்க்கலாம்.

1. ராகு தோஷம் – 21 தீபங்கள்
2. சனி தோஷம் – 9 தீபங்கள்
3. குரு தோஷம் – 33 தீபங்கள்
4. துர்க்கைக்கு – 9 தீபங்கள்
5. ஈஸ்வரனுக்கு – 11 தீபங்கள்
6. திருமண தோஷம் – 21 தீபங்கள்
7. புத்திர தோஷம் – 51 தீபங்கள்
8. சர்ப்ப தோஷம் – 48 தீபங்கள்
9. கால சர்ப்ப தோஷம் – 21 தீபங்கள்
10. களத்திர தோஷம் – 108 தீபங்கள்.