Thanusu / தனுசு

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

தனுசு ராசியின் ராசியாதிபதி குரு பகவானாவார். தனுசு ராசி கால புருஷனனின் அங்க அமைப்பில் இரு தொடைகளையும் குறிக்கும் மூன்றாவது உபயராசியாகும். பொன்னிற மஞ்சள் நிறமுடைய இந்த ராசி ஆண் ராசியாகும். இரவில் வலுப்பெற்றிருக்கும் மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதங்களில் பிறந்தவர்கள் தனுசு ராசியில் பிறந்ததாக கருதப்படுவார்கள்.

உடலமைப்பு

தனுசு ராசியில் பிறந்தவர்கள் நல்ல உயரமும் கூர்மையான மூக்கும், கனிவான பார்வையும் கொண்டவர்கள். பெரும்பாலோர் நல்ல உயரமாகவே இருப்பார்கள். நடக்கும் போதும், நிற்கும்போதும் ஒரு பக்கம் சாய்ந்திருப்பார்கள். உடல் நிறமும் எலுமிச்சம் பழம் போல கவர்ச்சிகரமாகவே இருக்கும். பேசும் போதும் சத்தமாக பேசும் குணம் படைத்தவர்கள் என்பதால் பேசுவது மற்றவர் பார்வைக்கு கட்டளையிடுவது போல இருக்கும். சிறு வயதில் எதிர்பாராத கண்டங்கள் ஏற்பட்டாலும் பூரண ஆயுளுடன் வாழ்வார்கள்.

குண அமைப்பு

தனுசு ராசிக்காரர்கள் பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்தவர்கள் என்றாலும் தற்பெருமை அதிகம் உடையவர்கள். எதிர்காலத்தில் நடக்கப் போவதை கூட முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கும்., சுயநலம் பாராமல் எதையும் துணிந்து செய்வார்கள். இவர்களுக்கு பொய் பேசுபவர்களையும், தீய பழக்க வழக்கம் உள்ளவர்களையும் கண்டால் பிடிக்காது. இவர்களுக்கு கோபம் வந்தால் எதிரில் யாருமே நிற்க முடியாது. நல்ல சுறுசுறுப்புடன் எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிப்பார்கள். எல்லோருக்குமே மரியாதை கொடுப்பார்கள். கள்ளம் கபடமின்றி அனைவரிடமும் ஆத்மார்த்தமாக பழகும். இவர்களிடம் எந்த ரகசியமும் இருக்காது. யாருக்கும் கீழ் படிந்து அடிமையாக நடப்பதென்பது இவர்களுக்கு இயலாத காரியமாகும். கெட்டவர்களையும் திருத்தி நல்வழிப்படுத்த இவர்களால் முடியும். இவர்களிடம் அன்பாக பழகினால் எதையும் சாதித்து கொள்ளலாம். மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்புடையவர்களாதலால் அடிக்கடி ஏதாவது பிரச்சினையில் மாட்டிக் கொள்வார்கள். சிறு வயதிலிருந்தே தெய்வ பக்தியும், தர்ம சிந்தனையும் இருக்கும்.

மணவாழ்க்கை

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு திருமணம் சற்று தாமதமாக அமைவதுதான் நல்லது. சீக்கிரமாக மண வாழ்க்கை அமைந்தால் பலவகையில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையின் உடல் நிலையும் அடிக்கடி பாதிப்படையும். இதனால் குடும்பத்தில் பிரிவும் துயரமும் ஏற்படும். ஆண்களாக இருந்தால் மண வாழ்க்கைக்குப் பின் மற்றொரு பெண்ணின் தொடர்பும் உண்டாகும். மனைவியால் தனசு ராசிக்காரர்களுக்கு துன்பமும் தொல்லையும் அதிகம் ஏற்படும்.

பொருளாதார நிலை

தனுசு ராசியில் பிறந்தவர்கள் சிறுவ வயதிலிருந்தே வசதி வாய்ப்புகளுடன் வாழ்வார்கள். பண நடமாட்டம் எப்பொழுதும் இவர்களுக்கு தடையின்றி அமையும். புதிய வீடு மனை வாங்குவதிலும் பழுது பார்க்கவும் திட்டமிட்டு செயல்பட்டாலும் அதனால் கடன் வாங்கவும் நேரிடும். தங்களுடைய வாழ்க்கை வசதிக்கு தக்கவாறு எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வார்கள். சுகபோக வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் வம்பு வழக்குகள் ஏற்பட்டாலும் அதை பெரிது படுத்தாமல் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள். பண வரவுகளில் தடை ஏற்பட்டாலும் தங்கள் வாழ்க்கை வசதிகளை குறைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள். வெகுதூரம் நடப்பது கூட இவர்களுக்கு சிரமம் என்பதால் அதற்கேற்றவாறு வண்டி, வாகன வசதிகளை பெருக்கிக் கொள்வார்கள்.

புத்திர பாக்கியம்

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு புத்திர பாக்கியம் அதிகம் ஏற்படுவதில்லை. ஒன்றிரண்டு பிறந்ததாலும் அவர்களால் நற்பலன்களும், இறுதி வரை பாசம் நேசமும் உடையவர்களாகத்தான் இருப்பார்கள். பிள்ளைகளால் சமுதாயத்தில் நற்பலன்களையே பெறுவார்கள்.

தொழில்

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு பெரும்பாலும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்
பணி, விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபடும் பணி, அரசு வழியில் கௌரவமாக பணிகள் அமைந்திடும். பலருக்கு ஆலோசனைகள் வழங்கக்கூடிய வக்கீல் பணி, ராணுவம் தீயணைப்புத்துறை, கணக்கு, கம்ப்யூட்டர் துறை, மற்றும் நல்ல பண பழக்கமுள்ள இடங்களில் பணிபுரியும் வாய்ப்பு உண்டாகும். தனுசு ராசிக்காரர்கள் செய்யும் தொழில் சிறிதோ, பெரிதோ அதை ஈடுபாட்டுடன் செய்து மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாக இருப்பார்கள். பதவி உயர்வு, வருமான உயர்வு போன்றவற்றை தாமாகவே ஏற்படுத்திக் கொள்வார்கள். கூட்டுத் தொழில் இவர்களுக்கு அவ்வளவு சாதகப் பலனை தராது என்றாலும் வியாபாரிகளாக இருந்தால் சர்க்கரை, வெல்லம், பழவகைகள் முதலியவற்றை விற்று லாபம் பெறுவார்கள். பெரிய, பெரிய நிறுவனங்களில் காரியதரிசியாகவோ, மேற்பார்வையாளராகவோ, கமிஷன் ஏஜென்ஸி போன்றவற்றிலோ நன்றாக சம்பாதிக்கும் ஆற்றலை பெற்றிருப்பார்கள். ஓய்வு நேரத்தை கூட வீணடிக்காமல் ஏதாவது ஒரு துறையில் சாதித்து விட வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர்கள். சிலருக்கு வர்ணம் தீட்டுதல், சிலை வடித்தல், சித்திரம் வரைதல் போன்றவற்றினாலும் லாபம் கிட்டும்.

உணவுவகைகள்

தனுசு ராசிகாரர்கள் பசலை கீரை, கேரட், முட்டை கோஸ், பச்சை பட்டாணி, பாதாம், பார்லி போன்றவற்றை உணவில் சேர்த்த கொள்வதும் ஜில்லென்று சாப்பிடுவதை தவிர்ப்பதும் நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9,10,11,12

கிழமை – வியாழன், திங்கள்

திசை -வடகிழக்கு

நிறம் – மஞ்சள், பச்சை

கல் – புஷ்ப ராகம்

தெய்வம் – தட்சிணா மூர்த்தி