ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமி கோயில்,

மந்த்ராலயம்

 

ஆந்திர மாநிலம் கர்ணூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய நகரமான மந்த்ராலயம், ‘மன்ச்சாலே’ என்ற பெயராலும் பிரபலமாக அழைக்கப்படுகிறது. இந்த நகரம் கர்நாடக மாநிலத்தின் எல்லையில், துங்கபத்ரா நதிக்கரையோரம் அமைந்துள்ளது. இந்தக் கோயில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் சமாதியான பிருந்தாவனத்தை சுற்றிக் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் விஷ்ணுவின் தீவிர பக்தனான பக்த பிரகலாதனின் மறுபிறவி என்று சொல்லப்படுகிறது.

மேலும் ராகவேந்திர சுவாமிகள் தனக்கு தானே சமாதி கட்டிக் கொண்டதுடன், அந்த சமாதியான பிருந்தாவனத்துக்குள் சென்ற பிறகு தான் 700 ஆண்டுகள் அதனுள்ளேயே வாழ்வேன் என்று தன் பக்தர்களிடம் தெரிவித்தார்.

அதன்படி 339 ஆண்டுகள் கழித்துவிட்ட நிலையில், மேலும் 361 ஆண்டுகள் ராகவேந்திரர் அதில் வாழ்வார் என்று பக்தர்கள் நம்பி வருகின்றனர்.

ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு நாட்கள் குரு ஜெயந்தி திருவிழா ராகவேந்திரரின் பக்தர்களால் வெகு கோலாகலமாக கொண்டாப்படும். அப்போது நாடு முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மந்த்ராலயம் நகருக்கு படையெடுத்து வருவது போல் வருவார்கள்.

மந்த்ராலயம் நகரின் முக்கிய சுற்றுலா அம்சங்களாக ஸ்ரீ ராகவேந்திர சுவாமி கோயில், பிக்ஷாலயா மற்றும் பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோயில் ஆகியவை அறியப்படுகின்றன. இந்த சிறிய நகரில் விமான நிலையம் இல்லையென்றாலும் ரயில் மற்றும் சாலை மூலமாக மந்த்ராலயம் நகரை சுலபமாக அடையலாம்.

மந்த்ராலயம் நகரின் மையத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் ரயில் நிலையம் அமைந்திருக்கிறது. அதோடு மந்த்ராலயம் நகருக்கு ஆந்திராவின் பிற பகுதிகளிலிருந்து நிறைய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.